Skip to main content

பெண்கள் கொலையில் சிக்கிய வேட்டைக்காரன் 

Published on 26/10/2022 | Edited on 26/10/2022

 

Person arrested in ariyalur two woman passed away case

 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஜெயங்கொண்டம் - மீன்சுருட்டி சாலையில் உள்ள பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்த மலர்விழி(35), கண்ணகி(41) எனும் இரு பெண்கள் கடந்த 22ம் தேதி அவர்கள் ஊருக்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மேலும் அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியும் களவு போயிருந்தது. ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கலைக்கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் அருகே இருந்த காட்டுப் பகுதியில் மழைக்காளான் பறிக்கச் சென்ற போது மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். 

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் அப்துல்லா கான் தனிப்படைகள் அமைத்து கொலையாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும், விசாரணையில் மோப்பநாயை போலீசார் பயன்படுத்தினர். அந்த மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து கழுவந்தோண்டி கிராமத்தில் உள்ள பால்ராஜ் என்பவரின் வீட்டின் அருகே சென்றது. 

 

அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் காட்டுப்பகுதியில் முயல், காட்டுப்பன்றி, உடும்பு போன்ற வன விலங்குகளை வேட்டையாட அடிக்கடி செல்பவர் என்று அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் கடந்த சில தினங்களாக பால்ராஜ் அவரது வீட்டில் இல்லை என்பதையும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பால்ராஜ், தனது இரு சக்கர வாகனத்தில் த.பழூர் பகுதிக்கு சென்றது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் செல்போன் டவர் மூலம் பால்ராஜை மடக்கி பிடித்தனர்.  

 

பிடிப்பட்ட பால்ராஜிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், “கொலை நடந்த இடத்திற்கு அருகே எனக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதனால், அங்கு அவ்வப்பொழுது காட்டு விலங்குகளை வேட்டையாட செல்வேன். சம்பவத்தன்றும் முயல் வேட்டைக்காக அங்கே சென்றேன். அப்போது ஒரு புதரில் முயல் அசைவது போல் தோன்றியது. அதனால் முயல் வேட்டைக்கு பயன்படுத்தும் சுளிக்கி எனும் ஆயுதம் கொண்டு அசைவு தெரிந்த இடத்தில் குத்தினேன். சுளிக்கி என்பது நீண்ட கழியில் கூர்முனை பொருத்தப்பட்டிருக்கும் ஒரு வித ஈட்டி போன்ற ஆயுதம். நான் குத்தியதும் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. 

 

நான் திடுக்கிட்டு அருகே சென்று பார்த்தபோது அந்தப் புதரில் காளான் பிடுங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தொடையில் சுளிக்கி குத்தப்பட்டிருந்தது. உடனே அந்த பெண்ணிடம் முயல் என்று தவறுதலாகக் குத்திவிட்டேன் என்று கூறி மன்னிப்பு கேட்டேன். அவர் என்னை திட்டியபடியே கையில் இருந்த செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் சொல்ல முயன்றார். தகவல் கிடைத்து ஊர்க்காரர்கள் திரண்டு வந்தால் நமக்கு ஆபத்து என்று நினைத்து பயந்து என் கையில் வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்து உட்பட சில இடங்களில் குத்தினேன். அவர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். அந்தப் புதரிலேயே அவரை போட்டுவிட்டு யாரும் இல்லை, யாருக்கும் தெரியாது என்று எண்ணியபடி திரும்பினேன். அப்போது அவருடன் வந்திருந்த இன்னொரு பெண், இவர் போட்ட சத்தத்தைக் கேட்டு அங்கு வந்தார். 

 

அவரை உயிரோடு விட்டால் கொலை செய்த விஷயம் வெளியே தெரிந்து விடும் என்று எண்ணி, கையில் வைத்திருந்த கட்டையால் அவர் தலையில் ஓங்கி அடித்தேன். அவரும் அதே இடத்தில் உயிரிழந்தார். நான் எதுவும் நடக்காதது போல் வீட்டிற்கு சென்று அங்கிருந்து எனது இரு சக்கர வாகனத்தில் த.பழூருக்கு சென்று தலைமறைவானேன். இது நகைக்காக நடந்த கொலை என்று திசை திருப்புவதற்காக அவர் அணிந்திருந்த 6.1/2 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றேன்” என்று பால்ராஜ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் போலீசார் பால்ராஜை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்த தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனர். கொலை செய்யப்பட்டவர்களும் கொலையாளியும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. மேற்கொண்டு எந்த அசம்பாவிதங்களும் நடந்துவிடக் கூடாது என்று போலீசார் அந்த இரு கிராமத்திலும் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பால்ராஜ் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி வைத்து வேட்டை ஆடியதாக ஏற்கனவே அவர் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

 


 

சார்ந்த செய்திகள்