139 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தைப் புதுப்பிக்க மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை 62,000 சதுர அடியில் இருந்து 77,000 சதுர அடியாக விரிவாக்கம் செய்ய சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதானம் விரிவாக்கம் செய்யப்படுவதால், கூடுதலாக 36,000 பார்வையாளர்கள் அமரும் வசதியுடன், உலகின் சிறந்த மைதானமாக சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்தை விரிவுபடுத்தும் பணியினால், அருகே வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மரங்களை வேரோடு எடுத்தால், அவற்றை மாற்று இடத்தில் நட வேண்டும்; நீர்நிலை மற்றும் நீரோட்டம் சார்ந்த இடங்களில் விரிவாக்கப் பணிகள் நடைபெறாது என உறுதியளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருவல்லிக்கேணி அரசுப் பள்ளியில் மாணவர்களின் திறனை மேம்படுத்த 20 லட்சம் ரூபாயும், அடையாறு ஆற்றைத் தூய்மைப்படுத்த 25 லட்சம் ரூபாயும் பக்கிங்ஹாம் கால்வாயைத் தூர்வாரித் தூய்மைப்படுத்த 25 லட்சம் ரூபாயும் சேப்பாக்கம் மைதானம் சார்பில் வழங்கப்பட உள்ளது.