சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சக பேராசிரியரைக் காலணியால் அடித்ததாக கூறப்பட்ட புகாரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்த பேராசிரியர், மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளார். அதேநேரம், ஒரே குற்றத்திற்காக அவருக்கு இரண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை கிளம்பி இருக்கிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் அன்பரசன். இதே புலத்தின் துறைத்தலைவராக இருப்பவர் குமாரதாஸ். இருவரில், அன்பரசன்தான் முதலில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். அதன்பிறகு ஆறு மாத இடைவெளியில் குமாரதாஸ் பேராசிரியர் ஆனார். முதலில் பேராசிரியர் ஆன தனக்குதான் துறைத்தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார் அன்பரசன். ஆனால், பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தரான சுவாமிநாதனோ, யாரும் எதிர்பாராத வகையில் குமாரதாசை இயற்பியல் துறைத்தலைவராக்கினார்.
அன்பரசன், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், பல்கலைக்கழகத்தில் வேறொரு சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருவதாலுமே அவருக்குத் துறைத்தலைவர் பதவி வழங்கப்படவில்லை என்று அப்போது சர்ச்சை எழுந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அன்பரசன் ஓரிரு நாள்கள் சில நிமிடங்கள் தாமதமாகப் பணிக்குச் சென்றபோது, வருகைப் பதிவேட்டில் அவருடைய பெயருக்கு நேராக, தாமத வருகை என்று குறிப்பிட்டு வந்திருக்கிறார் குமாரதாஸ். இதுகுறித்து அவர்களுக்குள் கருத்து மோதல் இருந்து வந்தது. இந்தக் கருத்து வேறுபாடு, 2018 மார்ச் 2- ஆம் தேதியன்று, அவர்களிடையே கைகலப்பாக மாறியது. இயற்பியல் துறைத்தலைவர் அறைக்குள்ளேயே இருவரும் மோதிக்கொண்டனர். இருவரும் தாங்கள் அணிந்திருந்த காலணியைக் கழற்றி மாறி மாறி தாக்கிக் கொண்டதாகக் கூறப்பட்டது.
இதில் யாருக்குமே வெளிக்காயங்கள் ஏற்படவில்லை. எனினும், குமாரதாஸ் சேலம் அரசு மருத்துவமனையிலும், அன்பரசன் கருப்பூரில் இருக்கும் மணிப்பால் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். துறைத்தலைவர் அறையில் இருந்து கையில் காலணியுடன் அன்பரசன் வெளியேறியதைப் பார்த்ததாக சில மாணவர்கள் சாட்சியம் அளித்திருந்ததன் பேரில், அடுத்த சில நாள்களில் பேராசிரியர் அன்பரசனை பணியிடை நீக்கம் செய்தது பல்கலைக்கழக நிர்வாகம்.
பணியிடை நீக்கக் காலத்திலேயே பேராசிரியர் அன்பரசனுக்கு கிடைக்க வேண்டிய மூன்று ஊதிய உயர்வை பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்திருந்தது. இது ஒருபுறம் இருக்க, அன்பரசன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி மீண்டும் அவருக்கு மூன்று ஊதிய உயர்வுகளை ரத்து செய்திருக்கிறது பல்கலைக்கழகம். இதற்கான தீர்மானத்தையும் சிண்டிகேட் குழுவில் நிறைவேற்றி இருக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டு, அதற்கான தண்டனையும் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அன்பரசன் மீண்டும் புதன்கிழமை (மே 27, 2020) பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அவருடைய அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்தது. அவர் பணியில் சேர்ந்ததை அடுத்து அறையின் சீல் உடைக்கப்பட்டது.
இது தொடர்பாக பேராசிரியர்கள் சிலரிடம் பேசியபோது, ''பெரியார் பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை அதிகார மையத்தில் இருப்பவர்களின் சுய விருப்பு, வெறுப்பின் அடிப்படையில்தான் எல்லாமே நடக்கிறது. தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் ஒரு நீதி; வேண்டாதவர்கள் என்றால் அவர்கள் மீது சிறு புகார் வந்தாலும் கடும் தண்டனை என்ற ரீதியில்தான் நடந்து கொண்டிருக்கிறது. அன்பரசனுக்குதான் இயற்பியல் துறைத்தலைவர் பதவி கிடைத்திருக்க வேண்டும். ஆனால், குமாரதாசுக்கு அப்பதவியைக் கொடுத்தனர். கேட்டால், நிலைய பதிவுமூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டது என்று சமாளிக்கிறார்கள்.
குமாரதாசை, பேராசிரியர் அன்பரசன் காலணியால் அடித்தார் என்பதற்கு நேரடி சாட்சியங்கள் இல்லை. ஆனாலும், அவரை பணியிடைநீக்கம் செய்தனர். பணியிடைநீக்கம் என்பது தண்டனை ஆகாது என்று நீதிமன்றமே சொல்லும்போது, அக்காலக்கட்டத்தில் அவருக்கு கிடைக்க வேண்டிய மூன்று ஊதிய உயர்வுகளை பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்திருக்கிறது. இப்போது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாகக் கூறி மேலும் 3 ஊதிய உயர்வுகளை நிறுத்தி இருக்கிறார்கள். ஒரே குற்றத்திற்கு இரண்டு தண்டனை எப்படி வழங்க முடியும்? ஊதிய உயர்வு ரத்து குறித்து சிண்டிகேட்டில் தீர்மானமும் நிறைவேற்றிவிட்டு, அவருடைய மீள் பணியமர்வு ஆணையில் தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று பூசி மெழுகியிருக்கிறார்கள். இதைச் சட்ட ரீதியாகச் சந்திப்போம்,'' என்றனர்.
பணி நியமனத்தில் ஊழல், பதவி உயர்வுகளில் விதிமீறல், சாதி பாகுபாடு என குற்றங்களின் கூடாரமாக விளங்கும் பெரியார் பல்கலைக்கழகம், இதுபோன்ற சர்ச்சைகளையும் லேசுபாசாக கடந்து சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.