தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "நிர்வாக நலன் கருதி இத்துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய காலமுறை அறிக்கைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலின்படி திருத்தியமைத்து அனுப்பிவைக்கப்படுகிறது. மண்டல இணை ஆணையர்கள் தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து அலுவலர்களிடமிருந்து (உதவி ஆணையர், நகை சரிபார்ப்பு அலுவலர், உதவிக் கோட்டப் பொறியாளர், மாவட்ட வருவாய் அலுவலர், இணை ஆணையர் / செயல் அலுவலர்கள், துணை ஆணையர் / செயல் அலுவலர்கள், உதவி ஆணையர் / செயல் அலுவலர்கள், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள், திருக்கோயில் பரம்பரை அறங்காவலர்கள், தக்கார் etc.,) காலமுறை அறிக்கைக்கான விவரங்களைப் பெற்று, தொகுத்து, சரிபார்த்து ஆணையருக்கு அனுப்பிவைக்க வேண்டுமென உத்தரவிடப்படுகிறது. மேலும் காலமுறை அறிக்கையில் அளிக்கப்படும் விவரங்களுக்கு இணை ஆணையர்களே முற்றிலும் பொறுப்பாவார்கள் என்பது தெளிவாக்கப்படுகிறது.
செப்டம்பர் 2021 மாதம் வரையிலான விவரங்களை அக்டோபர் மாதம் 25ஆம் தேதியிலும், அடுத்து வரும் மாதத்திற்கான காலமுறை அறிக்கை விவரங்களை ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதிக்குள் (அதாவது அக்டோபர் 2021-க்கான காலமுறை அறிக்கை நவம்பர் 10ஆம் தேதிக்குள் etc.,) இவ்வலுவலகத்திற்கு வந்து சேரும் வகையில் மின்னஞ்சலில் கண்டிப்பாக அனுப்பி வைக்க வேண்டுமென அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது. உரிய காலத்திற்குள் காலமுறை அறிக்கை விவரங்களை அனுப்பாத / அனுப்ப தவறும் சார்நிலை அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது." இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.