தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர் ஆய்வு முடித்துவிட்டு விருந்தினர் மாளிகையில் இருந்தபோது பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலெட்சுமியின் ஜீப் திடீரென காணாமல் போனது.
அரசு வாகனம் காணாமல் போனதால் பதறிய அதிகாரிகள் உடனே பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருச்சிற்றம்பலம் உள்பட தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இந்தத் தகவலையடுத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள நாகுடி கடைவீதி வழியாக பேராவூரணி வட்டாட்சியர் வாகனம் வருவதைப் பார்த்த போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
ஜீப்பில் இருந்து இறங்கிய இளைஞர் விசாரனை செய்யும் முன்பே, “நான் வைரக்கண்ணு, என் பெற்றோர் முத்துவேல் - செல்லம்மாள். அண்ணன் பாண்டித்துரை. எங்க ஊர் திருவத்தேவன். எங்க அப்பா, அம்மா திருவப்பாடியில் பூக்கடை வைத்திருக்காங்க. நான் கொஞ்ச நாள் தாசில்தார் வீட்டில் வேலை பார்த்தேன். இன்று நான் அந்தப் பக்கம் போகும்போது யாரோ அந்த ஜீப்பை எடுத்து போகச் சொன்னாங்க; நானும் எடுத்து வந்தேன். இதுல என்ன தப்பு இருக்கு” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்த இளைஞரையும் அதே ஜீப்பில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் போலீசார்.
ஜீப் பிடிபட்டது என்ற தகவலை அறந்தாங்கி வட்டாட்சியர் மார்டின் லூதர் கிங் மூலம் அறிந்து பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, நேரில் வந்து ஜீப்பை பெற்றுக்கொண்டார். அப்போது, “இந்த வைரக்கண்ணு என் வீட்டில் வேலை செய்யவில்லை; யாரென்றே தெரியாது” என்று கூறியுள்ளார். குடிபோதையில் தாசில்தார் வாகனத்தை திருடிச் சென்ற வைரக்கண்ணு மீது போலீசார் வழக்குப் பதிந்து கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.