முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை அனுபவித்து வந்த பேரறிவாளன் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.பேரறிவாளன் விடுதலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் ஆகியோரை பேரறிவாளன் சந்தித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மதிமுக தலைவர் வைகோவை பேரறிவாளன் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது அவரது மகன் துரை வைகோவும் உடனிருந்தார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ''ஈழ உணர்வுள்ளவர், ஆனால் நிரபராதி, எந்த குற்றமற்றவர், அதிலே எந்த தொடர்பும் கிடையாது. கடைசியில் நீதி வென்றது. இங்கிருக்கும் ஆளுநர் அரசாங்க முடிவை செயல்படுத்தாமல் இருந்தார். கடைசியில் உச்சநீதிமன்றம் தலையிட்டு 142 ஆவது பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்து அவருக்கு வாழ்வு கொடுத்திருந்தாலும் அவரது வாழ்வு அழிந்துவிட்டது, இளமைக்காலம் அழிந்துவிட்டது, வசந்தகாலம் எல்லாம் போய்விட்டது. விடுதலைக்காக அவரது தாயார் அற்புதம்மாள் ஒரு வீராங்கனையைப் போல போராட்டம் நடத்தினார். யாராக இருந்தாலும் சோர்ந்து விடுவார்கள், கவலையில் ஆழ்ந்து விடுவார்கள் ஆனால் அது எதுவுமே இல்லாமல் போராடினார். எமன் வாயிலிலிருந்து மகனை மீட்டுக் கொண்டு வந்துவிட்டார். மீதம் உள்ள 6 பேரும் இதே முறையைப் பின்பற்றி வெளியே வந்துவிடுவார்கள்'' என்றார்.