கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் அந்த கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் போட்டியிட்டார். ஆனால், அதிமுக சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் (இப்போது அ.ம.மு.க) வெற்றி பெற்றார். இந்நிலையில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
எப்படியும் திமுக கூட்டணியில் தமக்குத் தான் சீட் என எதிர்ப்பார்த்து காத்திருந்தார் தனபாலன். இந்த நிலையில், நேற்று முன்தினம் அறிவாலயத்தில் பேசிய ஸ்டாலின், இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடும் என்றார்.
இதனால், என்.ஆர். தனபாலன் எடப்பாடியை சந்தித்து அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துவிட்டார்.
"என்.ஆர் தனபாலன் அவ்வளவு செல்வாக்கு மிக்க ஆள்கிடையாது. ஆனால், அவர் சார்ந்த நாடார் சமூக ஓட்டுக்கள் திமுகவுக்கு எதிராக திரும்பும். இதை முன்வைத்து அதிமுக தேர்தல் பிரச்சாரம் செய்யும்" என்றார் தூத்துக்குடியை சேர்ந்த பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர்.
அவரே தொடர்ந்து, ''எப்படியும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால், திமுக தலைமை கண்டு கொள்ளவில்லை. இந்த முறை சீட் இல்லை, ஆதரவு கொடுங்கள் அடுத்தமுறை கொடுப்போம் என்று கூப்பிட்டாவது பேசி இருக்கலாம். போன தடவை (2016 தேர்தல்) மனிதநேய மக்கள் கட்சிக்கு சட்டமன்ற தொகுதிகள் 4 ஒதுக்கப்பட்டது. அதற்கு முன்பு (2014) நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்தமுறை அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். அவர்களுக்கும் கை விரித்து விட்டது. இதுவும் திமுகவுக்கு பாதகம் தான்" என்றார்.