கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டதற்கு அச்சுங்கச் சாவடி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடியில் வேலை செய்துவந்த 28 ஊழியர்கள் முன் அறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதன் காரணமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் கடந்த 1ம் தேதியிலிருந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இன்றுடன் அவர்களது போராட்டம் 24ம் நாளை எட்டியுள்ளது.
அந்த வகையில், சுங்கச்சாவடி ஊழியர்கள், சுங்கச்சாவடியில் உள்ள சி.சி.டி.வி.கள் மற்றும் ஃபாஸ் டாக் இயந்திரங்களை முடக்கியும் போராடினர். இதன் காரணமாக சுங்கச்சாவடி உரிமையாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதேசமயம், கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு பாதுகாக்கப்பட்டுவருகிறது. மேலும், நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இன்று தீபாவளி அன்று ஊழியர்கள் கருப்புச் சட்டை அணிந்து போராடினர். மேலும், இந்த தீபாவளி தங்களுக்கு துக்க தீபாவளி என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும், கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் இந்த போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.