பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் ஆலை அதிகாரிகள் கூட்டம் ஆலைக் கூட்ட அரங்கில் நேற்று (7-12-2021) மாலை 3 மணிக்கு தலைமை நிர்வாகி & மாவட்ட வருவாய் அலுவலர் கே. சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. அதிகாரிகள் தரப்பில் தலைமைக் கரும்பு அலுவலர் ரவிச்சந்திரன், துணைத்தலைமை ரசாயினர் பெரியசாமி, துணைத்தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) நாராயணன், கணக்கு அலுவலர் ஜான்பிரிட்டோ, தொழிலாளர் நல அலுவலர் ராஜாமணி, மற்றும் பொறியியல், ரசாயணப்பிரிவு, கரும்பு அபிவிருத்தி அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கரும்பு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மு. ஞானமூர்த்தி, ஏ.கே. ராசேந்திரன், சீனிவாசன், பெருமாள், ராமலிங்கம், சக்திவேல், பச்சமுத்து, வரதராஜன், பாலகிருஷ்ணன் டிராக்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தேவேந்திரன், நடராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வரும் 10.12.2021இல் துவங்குவதாக இருந்த 2021 - 2022 ஆண்டுக்கான கரும்பு அரவையைப் பருவமழை காரணமாக இந்த மாத இறுதியில் துவங்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. பங்குதாரர்கள் பேரவைக் கூட்டம் வரும் 23.12.2021 அன்று நடக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் சுமார் 3 லட்சம் டன் அரைப்பது என திட்டமிடப்பட்டுள்ளது. அரவை நாள் 107 நாள் எனவும், ஒருநாளைக்கு 2,542 டன் அரைப்பது எனவும், இந்த ஆண்டில் 2,20,000 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சர்க்கரை கட்டுமானம் 9.5% கொண்டுவருவது என கூறினார்கள்.
இணைமின் திட்டத்திற்கு சுமார் ரூ. 10 கோடி பங்கு தொகை கொடுத்த விவசாயிகளுக்குப் பங்கப்பத்திரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சேலம் மோகனூர் சர்க்கரை ஆலைக்கு வழங்கிய பக்காசுக்கு ரூ. 7 கோடி பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்குக் கொடுக்க வேண்டிய பாக்கி தொகையைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 2020 - 2021ஆம் ஆண்டுக்கு அரசு அறிவித்த கூடுதல் தொகை டன்னுக்கு ரூ. 42.50ம் தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகை ரூ. 150ம் சேர்த்து ரூ. 192.50ஐ வரும் பொங்கலுக்குள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இணைமின் திட்ட உற்பத்தியின் திட்ட இலக்கான 18 மெகாவாட் மின்சாரத்தை நடப்பு கரும்பு அரவைப் பருவத்தில் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்கும்போது அதில் பாதி லாபத்தை ஆலை நிர்வாகத்திற்கு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பங்குதாரர்கள் பேரவைக் கூட்டத்தில் வழங்கப்படும் சர்க்கரையை 5 கிலோவாக கூட்டி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த கரும்பு டன்னுக்கு ரூ. 4000 வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆலை அரவை துவக்க விழாவிற்குப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களையும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் அழைப்பது என முடிவெடுக்கப்பட்டது. பருவமழையால் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கரும்பு எடுத்துவரும்போது மின் விபத்து ஏற்படாமல் இருக்க தாழ்வான மின் கம்பிகளை உயர்த்திக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கரும்பு நடவுக்கு தகுந்தார்ப்போல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டி கரும்புக்கான விலையை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.