வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (18/11/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (19/11/2021) காலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும். இதனால் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரிக்கும். திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும்.
அதேபோல், சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், நாகை, காஞ்சிபுரம், நாமக்கல், ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதனால் ஏரி, குளம், கால்வாய் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி, புது ஆயக்குடி கிராமத்தில் உள்ள வீரமாத்தி அம்மன் கோவில் அருகே மூதாட்டி ஒருவர் சில நாட்களாக ஆதரவின்றி சாலையோரம் வசிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
அதே போல் சாலையோரம் வசிப்பவர்கள் மழையால் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் மூதாட்டி ஒருவர் நெகிழிப்பைக்குள் நனைந்தபடி தவித்து வந்ததை கண்ட சிலர் ஆயக்குடி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நிகழ்விடத்திற்குச் சென்ற பெண் போலீஸார் ஆதரவின்றி தவித்த மூதாட்டி வீரம்மாளை மீட்டனர். அவரை குளிக்கச் செய்து, முடி திருத்தம் செய்ததோடு பழனியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர். தாய் உள்ளத்தோடு மூதாட்டியை மீட்ட காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, காவலர் சுகப்பிரியா ஆகியோருக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.