என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மூலம் அனல் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மின்சார உற்பத்திக்காக பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் இரண்டாவது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கம் செய்வதற்காக புவனகிரி தாலுகாவுக்கு உட்பட்ட கரிவெட்டி, கத்தாழை, வளையமாதேவி, மும்முடிச்சோழகன் ஆகிய கிராமங்களில் உள்ள 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் 2006 ஆம் ஆண்டில் என்.எல்.சியால் ஒப்பந்தம் போடப்பட்டு ஏக்கர் ஒன்றுக்கு 6 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. அதேசமயம் விவசாயிகள் அந்த விளைநிலங்களில் தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர்.
இதனிடையே புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக விருத்தாசலம் மற்றும் புவனகிரி தாலுகாக்களுக்கு உட்பட்ட 25 கிராமங்களிலுள்ள 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களையும் கையகப்படுத்த என்.எல்.சி முயன்று வருகிறது. மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படும் இந்த நிலங்களுக்கு ஏக்கருக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு, நிலம் கொடுக்கும் குடும்பத்தினருக்கு ஒப்பந்தத் தொழிலாளர் பணி மற்றும் சில நிவாரண உதவிகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தால் தான் நிலங்களைக் கொடுப்போம் என அப்பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதேசமயம் என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுப்பவர்களுக்கு எந்த வேலையும் வழங்கப்படுவதில்லை, நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். எனவே, என்.எல்.சி நிறுவனம் முழுமையாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பா.ம.க பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதேபோல் '2006 இல் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு வெறும் 6 லட்சம் மட்டும் இழப்பீடு வழங்கியது போதாது' தற்போது கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு வழங்குவது போல 25 லட்சம் என சமமான இழப்பீடு வழங்க வேண்டும்', 'வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்' என வலியுறுத்தி ஏற்கனவே நிலங்கள் கொடுப்பதற்கு ஒப்பந்தம் போட்ட விவசாயிகளும் தற்போது நிலங்களை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதையடுத்து ஏற்கனவே 6 லட்சம் வழங்கப்பட்ட நிலங்களுக்கு கருணைத் தொகையாக மேலும் 3 லட்ச ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், விவசாயிகள் இதனை ஏற்காமல் சமமான இழப்பீடு வழங்கினால் தான் நிலங்களை ஒப்படைப்போம் எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், கம்மாபுரம் அருகேயுள்ள வளையமாதேவி, கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன் உள்ளிட்ட கிராமங்களில், கடந்த 2006 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்ட நிலங்களை கையகப்படுத்துவதற்காக என்.எல்.சி நிறுவனம் கடந்த 9ம் தேதி நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் வளையமாதேவி கிராமத்தில் நிலங்களை சமப்படுத்தும் பணியைத் தொடங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.கவினர் மற்றும் விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அதையடுத்து தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் என்.எல்.சிக்காக கட்டாயப்படுத்தி மிரட்டி நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி 11ம் தேதி பா.ம.க சார்பில் கடலூர் மாவட்டம் முழுவதும் முழுகடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும் அ.தி.மு.க கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான அருண்மொழித்தேவன் தலைமையில் அக்கட்சியினரும் பல்வேறு விவசாயச் சங்கத்தினரும் நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்துவதால் வளையமாதேவி கிராமத்தில் நிலங்களை சமப்படுத்தும் பணியை என்.எல்.சி நிறுத்தியது.
இந்நிலையில் நேற்று திடீரென என்.எல்.சி அதிகாரிகள் கரிவெட்டி கிராமத்தில் நிலங்களை அளவீடு செய்யச் சென்றனர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட அந்த கிராமத்து மக்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "எங்களுக்கு நிரந்தர வேலை, ஏக்கர் ஒன்றுக்கு 25 லட்சம் சமமான இழப்பீடு வழங்கவில்லை. எனவே நிலங்களை அளவீடு செய்ய விடமாட்டோம்" எனக் கூறி என்.எல்.சி அதிகாரிகள் மற்றும் போலீசாரை வெளியேறுமாறு வாக்குவாதம் செய்தனர். என்.எல்.சி அதிகாரிகள் இதனை ஏற்க மறுத்ததால் அந்த பகுதியை சேர்ந்த செல்வம் மனைவி விஜயா(40), சந்திரகாசு மகன் பஞ்சராஜ்(47), மாணிக்கம் மகன் ராமலிங்கம்(50) உள்ளிட்ட விவசாயிகள் ஆத்திரமடைந்து தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அப்போதே கிராம மக்கள் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து என்.எல்.சி அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யும் பணியை நிறுத்திவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டனர்.