திண்டுக்கல்லில் காந்திகிராம பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மதுரையிலிருந்து விமானத்தில் சென்னை வந்தடைந்தார். அதே சமயத்தில் மதுரையில் விமான நிலைய ஓய்வறையில் அமைச்சர்களைச் சந்தித்து பருவமழை குறித்து ஆலோசனைகளில் ஈடுபட்டார்.
முதல்வருடன் ஆலோசனையில் ஈடுபட்ட பின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டு வருகிறது. இன்றைக்கும் தமிழகத்தில் பருவமழை பெய்து வருகிறது. எனினும் பாதிப்பு இல்லை. விமான நிலையத்தில் ஓய்வறையில் இருக்கும்போது கூட பருவமழையைப் பற்றித்தான் முதல்வர் பேசினார். பருவ மழையைப் பொறுத்தவரை எதையும் சந்திக்கும் நிலையில் அரசு இருக்கிறது.
பாதிப்பு ஏற்படும்போது கொடுப்பதற்குத் தமிழக அரசிடம் நிதி இருக்கிறது. வேண்டுமென்றால் கொடுப்பதற்கு முதல்வர் இருக்கிறார். பணம் என்பது பெரிய பொருட்டு இல்லை.
நீர் நிலைகளின் அருகே புகைப்படம் எடுக்கிறார்கள். அதற்கு விழிப்புணர்வு செய்கிறோம். நாம் சொன்னாலும் அதுபோல் செய்பவர்களை நாம் தவிர்க்கவே முடியவில்லை. அவர்கள் உயிர் அவர்களுக்கு முக்கியம். விலை மதிப்பில்லாத சொத்து என்பது உயிர் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை நாங்கள் தொடர்ந்து அகற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது சில பிரச்சனைகள் அங்கு வருகிறது. அங்கு இருப்பவர்களை வெளியேற்ற வேண்டி இருக்கிறது. வெளியேறுபவர்களுக்கும் உரிய ஏற்பாடுகளைச் செய்து தரும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவோம்” எனக் கூறினார்.