ஊரில் கரோனா தொற்று அதிகரிப்பதால் அதிரடியாக டாஸ்மாக் கடையை மூடியுள்ளனர் புதுக்கோட்டை அருகேயுள்ள கிராம மக்கள்.
கரோனா தொற்று அறியப்பட்டால் அந்த கிராமத்தில் மட்டுமின்றி பக்கத்து கிராமங்களிலும் உள்ள டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளையும் மூடி சாலைகளை முடக்கி வைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அந்த பழைய நடைமுறைகள் எதும் அரசு கடைபிடிக்கவில்லை.
இந்த நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து 1200 பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் தினமும் தொற்று அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அந்தந்த பகுதி வர்த்தக சங்கங்கள், உள்ளுர் ஊரடங்குகளை அமல்படுத்தி வருகின்றனர். புதுக்கோட்டை, ஆலங்குடி, கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, அறந்தாங்கி என பல ஊர்களிலும் படிப்படியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதே போல தற்போது புதுக்கோட்டை அருகில் உள்ள வேப்பங்குடி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அருகில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரியில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். கடந்த வாரம் கல்லூரிக்கு வெளியூரில் இருந்து சிலர் வந்துள்ளனர். அவர்களை ஓட்டுநர் வெளியூரில் கொண்டு போய் விட்டு வந்துள்ளார். அதன் பிறகு அவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது கிராமம் புதுக்கோட்டை நகரில் இருந்து மிக அருகில் உள்ளதால் டாஸ்மாக் கடைக்கு ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். அதனால் மேலும் கரோனா தொற்று பரவிவிடக்கூடாது என்பதற்காக கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கிராம மக்கள் இணைந்து டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியை அடைத்துள்ளனர். மேலும் கடை திறக்க வந்த டாஸ்மாக் ஊழியர்களிடமும் கடை திறக்கக்கூடாது என்று கூறிவிட்டனர். கடந்த சில மாதத்திற்கு முன்பே டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடந்த நிலையில் இன்று மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.