நிவர் புயல் வடதமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனச் சொன்னாலும் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நெல், நிலக்கடலை, வாழை, கரும்பு பயிர்களை நாசம் செய்துள்ளது நிவர் புயல்.
நிவர் புயல் பாதிப்புகளை அறிய, மத்திய ஆய்வுக்குழு தமிழகம் வந்துள்ளது. இந்தக் குழு டிசம்பர் 2ஆம் தேதி வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆய்வு நடத்துகிறது. வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம் தாலுகாக்களிலும் ராணிப்பேட்டையில் ஆற்காடு, திமிறி, ராணிப்பேட்டை, நெமிலி, அரக்கோணம், காவேரிப்பாக்கம் பகுதிகளிலும் ஆய்வு செய்கிறது.
வேலூர் மாவட்டத்தில் 242 வீடுகள் சேதம், 6,500 பறவைகள், கால்நடைகள் இறந்துள்ளதாகவும், 3 ஏக்கர் விவசாய நிலங்களில் வைக்கப்பட்டுள்ள பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் அறிக்கை தயார் செய்துள்ளன. இதேபோல் இராணிப்பேட்டை மாவட்டத்திலும் பாதிப்புகளை கணக்கெடுத்து அதனை அறிக்கையாக தயாரித்துள்ளனர். இதனை நாளை ஆய்வுக் குழுவிடம் ஒப்படைக்கவும், பாதிப்படைந்த பகுதிகளை நேரில் அழைத்து சென்று பார்வையிடவும் திட்டமிட்டுள்ளனர்.
விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அரசாங்கம் இன்னும் அதனை அறிவிக்காததால் மத்திய குழுவிடம் நேரில் முறையிடவும் விவசாய சங்கங்கள் ஆலோசனை நடத்திவருவதாக கூறப்படுகிறது.