
நாகை அருகே தென்மருதூரில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் மீது வலிவலம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள தென்மருதூரைச் சேர்ந்தவர் ஜெயவேல். கடந்த சனிக்கிழமை மதியம் 20 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது வீடுபுகுந்து கொடூரமாகத் தாக்குதல் நடத்தி டிராக்டரை எடுத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஜெயவேலுவின் உறவினர்களும், பொதுமக்களும் வலிவலம் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். ஆனால், அந்தப் புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த ஜெயவேலுவின் உறவினர்களும், அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்களும் ஒன்றுதிரண்டுவந்து கீழ்வேளூர் - கச்சனம் பிரதான சாலையை மறித்து நியாயம் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வலிவலம் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் செயல்படுவதாகக் கூறி அவர்களைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதோடு புகாரைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து பேசுவதாகவும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முழக்கமிட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழ்வேளூர் காவல்நிலைய ஆய்வாளர் தியாகராஜன், வந்த வேகத்திலேயே போராட்டக்காரர்களிடம், ‘புகார் கொடுத்தது இருக்கட்டும். யாரக் கேட்டு ரோட்ட மறிச்சீங்க. ரோட்டுல உட்காந்து எதுக்கு பப்ளிக்க மறிச்சீங்க. அடிச்சி தூக்கிப்போட்டுடுவேன்’ என மிரட்ட, அங்கிருந்த பெண் ஒருவர், ‘அடிச்சிக் கொல்லுங்க; நியாயம் கேட்டதுக்கு அடிச்சிக் கொல்லுங்க’ என இன்ஸ்பெக்டர் தியாகராஜனின் காலைப் பிடித்துக்கொண்டி தரையில் உருண்டு புரண்டார். உடன்பாடு எட்டப்படாத நிலையில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சாலைமறியல் போராட்டத்தால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசை கட்டியதால் பரபரப்பு அதிகமானது. அதன்பிறகு காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டனர்.