தமிழகத்தில் ஒவ்வொரு கோயில் திருவிழாக்களிலும் ஏதாவது ஒரு வித்தியாசமான நிகழ்வுகள் இடம் பெறுவது வழக்கம். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மாங்காடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்கத்து கிராமமான கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதி மக்களுக்கு மாங்காடு கிராம மக்கள் அழைப்பு, கொடுத்து தங்கள் கிராமத்திற்கு அழைத்து விருந்து கொடுப்பதுடன் தேருக்கு வடம் தொட்டுக் கொடுக்கவும், அழைப்பது காலங்காலமான வழக்கம்.
கடந்த ஒன்பது வருடங்களுக்கு பிறகு மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய திருவிழா மற்றும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் மாங்காடு கிராம மக்கள் கொத்தமங்கலத்தில் உள்ள குடியிருப்பு பகுதி மக்களுக்கு அழைப்புக் கொடுக்கச் சென்றபோது முதல்முறையாக விருந்து உபசரிப்பு செய்து அனுப்பி வைத்தனர்.
மாங்காடு கிராம மக்களின் அழைப்பை ஏற்று சனிக்கிழமை நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கொத்தமங்கலம் கிராம மக்கள் திங்கள்கிழமை நடந்த தேரோட்டத்திற்கு வடம் தொட்டு கொடுப்பதற்காக தாரை தப்பட்டைகளுடன் குதிரையில் ஏறி மாங்காடு கிராமத்திற்கு வந்தனர். கிராமத்தின் மையப்பகுதியில் குதிரையுடன் காத்திருந்த கொத்தமங்கலம் பகுதி மக்களையும், மாங்காடு கிராம நிர்வாக அலுவலரையும் மாங்காடு கிராமம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்து தேருக்கு வடம் தொட அழைத்துச் சென்றனர்.
மாலையில் நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்க குதிரையில் வந்தவர் வடம் தொட்ட பிறகு தேரை பக்தர்கள் இழுத்துச் சென்றனர். இந்த தேரோட்ட திருவிழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனும் கலந்து கொண்டார். ஒரு கிராம தேரோட்டத்திற்கு மற்றொரு கிராம மக்கள் குதிரையில் வந்து வடம் தொட்டு கொடுத்ததை நெகிழ்ச்சியாக பார்த்தனர் பக்தர்கள்.
அதேபோல், அதே திருவிழாவில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வடகாடு காவல் நிலைய ஆய்வாளராக இருந்து பதவி உயர்வில் டி.எஸ்.பி.யாக நாகப்பட்டினத்தில் பணிப்புரிந்து வரும் பரத்சீனிவாஸை மறக்காத மாங்காடு கிராம இளைஞர்கள் போலீஸ் உடையில் பதாகை வைத்து வரவேற்றதுடன் திருவிழாவிற்கும் நேரில் அழைத்து வந்து மரியாதை செய்தனர்.
அவ்வளவு பெரிய கூட்டத்திலும் டி.எஸ்.பி. பரத்சீனிவாஸனை அடையாளம் கண்டு கொண்ட பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். "நான் இந்தப் பகுதியில் பணி செய்து சில வருடங்கள் ஆனாலும் இந்த கிராம மக்கள் என் மீது இத்தனை அன்பு வைத்திருப்பது ரொம்பவே மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் உள்ளது" என்றார்.