தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (3.10.2023) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்திக் காட்டுவது முதலாவது இலக்கு. இரண்டாவது பொது அமைதியை கெடுக்க நினைப்பவர்கள் முழுமையாக தடுக்கப்பட வேண்டும். அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிட கூடியவர்களுக்கு இடமளித்து விடக்கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்தோடு இத்தகைய சக்திகள் செயல்பட வாய்ப்புகள் உள்ளது. அதனை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் ஆகியவற்றை அறவே ஒழிக்க வேண்டும். இது நமது எதிர்கால தலைமுறறையை சீரழிக்கிறது. இது சம்பந்தமாக குற்றவாளிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும் சாலை விபத்துகளால் மிக அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையளிக்கிறது. இந்த நிலையை மாற்ற காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்களை வகுத்து விபத்துகளை குறைப்பது குறித்து ஆய்வு செய்திட முயற்சிகளில் முழுமையாக ஈடுபட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இம்மாநாட்டில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், அரசுத் துறைச் செயலாளர்கள், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் மாநாட்டில் உரையாற்றிய காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், “மாநிலத்தின் வளர்ச்சிக்கு அமைதியே அடிப்படை. அந்த அமைதியை நிலைநாட்டி, குற்றங்களை முன்பே தடுக்கவும், அரசின் திட்டங்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதிசெய்யவும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அலுவலர்கள் முதல் நாள் மாநாட்டில் அறிவுறுத்தினேன். சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு தொடர்பாக அலுவலர்கள் கூறிய ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.