நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று (19/02/2022) மாலை 06.00 மணியுடன் அமைதியாக நடந்து முடிந்தது. பல இடங்களில் சிறு பிரச்சனைகள் எழுந்த போது, அந்த இடங்களுக்கு விரைந்து சென்று உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக காவல்துறை துணைத் தலைவர்கள், மண்டல காவல்துறைத் தலைவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் பணி இன்னும் முடியவில்லை. சில பிரச்சனைகள் இனிமேல் தோன்ற வாய்ப்பு உண்டு. எனவே. ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். பிரச்சனையான பகுதிகள் கண்காணிக்கப்படுதல் வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகள் வாக்கு எண்ணுமிடத்தில் ஒப்படைத்த பின்னர் தலைமை அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்புதல் வேண்டும்.
தீவிர கண்காணிப்புப் பணிகள் மாநகரங்களிலும், மாவட்டங்களிலும் அடுத்த மூன்று நாள்களுக்கும் தொடரும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.