தமிழக அரசு பள்ளிகளில் 6, 7, 8-ஆம் வகுப்புகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி உள்ளிட்டவற்றை கற்றுத் தருவதற்காக 2011-2012 ஆம் கல்வியாண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் 16,549 சிறப்பாசிரியர்கள் பகுதிநேரமாக நியமிக்கப்பட்டனர்.
முதலில் தொகுப்பூதியமாக ரூ.5ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர் 2014-ஆம் ஆண்டில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு, தொகுப்பூதியம் ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இதன் பின்னர் 14-ஆவது சட்டசபை காலம் முடியும் வரை ஊதிய உயர்வு வழங்கவில்லை. 15 -ஆவது சட்டசபையில் ரூ.700 ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து தொகுப்பூதியம் ரூ.7700 ஆக உயர்ந்தது. 15-ஆவது சட்டசபை காலம் முடிய உள்ள நிலையில் மேலும் ஊதிய உயர்வு வழங்கவில்லை. இதனால் எவ்வித பணப்பலன்களும் கிடைக்காமல் சொற்ப ஊதியத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர்.
பணியின் பெயர்தான் பகுதிநேர ஆசிரியர் என்றாலும், அவரவருக்கான பள்ளிகளில் வேலைநாள் முழுவதும் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் போன்ற அனைத்து விவரங்களை கணினியில் பதிவேற்றுதல், உதவித்தொகை பணிகள் மற்றும் அரசின் திட்டங்களை மாணவர்களுக்கு பெறுவதற்கான பணிகளையும் பகுதிநேர ஆசிரியர்களே மேற்கொண்டு வருகின்றனர். ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்ட காலங்களில் அரசின் உத்தரவின்படி பள்ளிகளை பகுதிநேர ஆசிரியர்களே திறந்து நடத்தி வந்துள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறையில். தற்காலிகமாக பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு போனஸ், மகப்பேறு விடுப்பு சாத்தியமாகிறது. ஆனால், மாணவர்களுக்கு கல்வி அறிவை பெருக்கும் அறப்பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு அரசு கருணை காட்டுவதில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள்.
இதனால் பாதிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் தரப்பில் இருந்து தனித்தனியாகவும், சங்கத்தின் சார்பிலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணை மனுக்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டுவருகிறது. இதுமட்டுமல்லாது, தங்களது கோரிக்கைகளை முன்வைத்து குரல் எழுப்புமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்கள்.
இதனால் 20 அரசியல் கட்சிகள் தமிழகஅரசுக்கு அறிக்கை வெளியிட்டு பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வற்புறுத்தி உள்ளன.
இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் பகுதிநேர ஆசிரியர்கள் கருணை மனு அளித்தனர். இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறும்போது, “தமிழகம் தவிர்த்து ஆந்திராவில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.14 ஆயிரம், அந்தமானில் ரூ.21ஆயிரம் தொகுப்பூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி, ஈ.எஸ்.ஐ. மகப்பேறு விடுப்பு உள்ளிட்டவைகள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். மேலும், ஆண்டுதோறும் மே மாதம் ஊதியம் இல்லாமலேயே மாணவர் சேர்க்கை, அலுவலகப்பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
பணியில் சேர்ந்து நிரந்தரம் இல்லாமலேயே ஆயிரக்கணக்கானோர் ஓய்வு, பணி விலகல், மறைவு என்ற வகையில் சுமார் 5 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உருவாகிவிட்டன. ஒட்டு மொத்த குடும்பங்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றோம். கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது எனவும், அதற்காக 3 மாதத்துக்குள் கமிட்டி அமைக்கப்படும் எனவும், அனைவருக்கும் அவரவர் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு விருப்ப மாறுதல் வழங்கப்படும் எனவும் கூறினார். ஆனால் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.
ஆசிரியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் வருகையின்மை போன்ற நேரங்களில் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களை முன்னிலைப்படுத்துகின்றனர். உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் பாடங்களில் நிரந்தரப்பணிக்கு தேர்வு நடத்தினால்கூட முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை.
10-ஆவது பட்ஜெட்டில் அரசின் கவனத்தை ஈர்க்க கவர்னர், முதல்வர், துணை முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர், பணியாளர் நிர்வாக சீர்திருத்த அமைச்சர், ஊதியக்குறை தீர்க்கும் குழு தலைவர், பள்ளிக்கல்வி செயலர், பள்ளிக்கல்வி ஆணையர், மாநில திட்ட இயக்குனர், சட்டசபை மனுக்குள் குழு தலைவர் என 10 பேருக்கு கருணை மனுக்களை தமிழகம் முழுவதும் இருந்து அனுப்பினோம். ஆனால் சட்டசபையில் அறிவிப்பு எங்களுக்கு மட்டும் இல்லாமல் போனது.
கரோனாவால் சட்டசபையும் விரைந்து முடிக்கப்பட்டுவிட்டது. ஊதியக் குறைத்தீர்க்கும் கமிட்டியில் பங்கேற்று கோரிக்கைகளை கொடுத்துள்ளோம். அனைத்து கட்சிகளும் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய அறிக்கை கொடுத்துள்ளார்கள். மாவட்ட ஆட்சியர்களுக்கு கருணை மனுவை தற்போது அனுப்பி வருகிறோம்.
எங்கள் மீது கருணை காட்டுங்கள். 10 கல்வி ஆண்டுகள் பணி என்பதையே முன்உதாரணமாக கொண்டு, மனிதநேயத்துடன் கருணையுடன் தாயுள்ளத்துடன் தமிழக அரசு தற்போதுள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய புதிய அரசாணை வெளியிட வேண்டும். மேலும், தேர்தல் நெருங்கிவிட்டதால் விரைவில் அறிவிக்க இருக்கும் இடைக்கால பட்ஜெட்டிலாவது கூடுதலாக நிதி ஒதுக்கி பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய கருணையுடன் தமிழக அரசை வேண்டி கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.