தி.மு.க கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ். இவர் பண்ருட்டியில் முந்திரி வியாபாரம் செய்து வருகிறார். வெளிநாடுகளுக்கு முந்திரியை ஏற்றுமதி, இறக்குமதி செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அவருக்குச் சொந்தமான இடம் சென்னை - கும்பகோணம் சாலை பண்ருட்டியில் 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 3 ஏக்கர் விவசாய நிலத்தை 2010ஆம் ஆண்டு பண்ருட்டியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பத்திரம் வைத்து கடன் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 11 ஆண்டுக் காலம் வட்டி கட்டாத நிலையில் வட்டிகட்ட கோரி வங்கியிலிருந்து பலமுறை நோட்டீஸ் வழங்கியுள்ளனர். வட்டியுடன் சேர்த்து நிலுவைத் தொகை ரூபாய் 55 கோடி கட்டாமல் காலம் தாழ்த்தி வந்ததால் வங்கி நீதிமன்றத்தை நாடியது. அதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி காவலர்கள் பாதுகாப்புடன் வங்கி ஊழியர்கள் எம்.பி ரமேஷ் அடமானம் வைத்த 3 ஏக்கர் விவசாய நிலத்தை ஜப்தி செய்தனர். அங்கு, 'இந்த இடம் வங்கிக்குச் சொந்தமான இடம்' என்று எழுத்துப் பலகை வைக்கப்பட்டது. பின்னர் ஜே.சி.பி இயந்திரம் மூலம் விவசாய நிலத்தில் இருக்கும் மரங்களை வெட்டி, சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ்க்கு சொந்தமான இடங்களைப் பல வங்கிகளில் வைத்துப் பல கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். அண்மைக் காலமாக பத்திரிகைகளில் கடன் கட்டவில்லை என விளம்பரம் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளது. மேலும் ஏற்கனவே இவர் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் தேடப்பட்டு சரணடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.