தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று இரவு முதல் இடைவிடாது மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் குளம் போல மழை நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திருச்சி ஆகிய 17 மாவட்டங்களில் கனமழை தொடரும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 13 சென்டிமீட்டர் மழையும், பெரம்பூரில் 12 சென்டிமீட்டர் மழையும், சென்னையில் 10 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.