விபத்தில் மரணமடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்!
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகிலுள்ள புதுநகர் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் சீனிவாசன், சரிதா தம்பதியரின் மகன் வித்யாசரண் வயது 12, இவர் தஞ்சை தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார், கடந்த சில தினங்களுக்கு முன்பாக உறவினர்களுடன், காரில் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்து சொந்த ஊருக்கு திரும்பி வரும் வழியில் சித்தூர் அருகே எதிர்பாராத விதமாக இவர்களின் கார் மீது லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயமடைந்த வித்யாசரண் வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், திடீரென்று மூளைச்சாவு நிலையை அடைந்தார். இதனை மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். இந்த துக்கமான நிகழ்வில் தமது குழந்தை வேறு ஒருவரின் உடலில் வாழட்டும் என்று எண்ணிய பெற்றோர் தனது மகனின் உடல் உறுப்புகளை தாமாக முன்வந்து தானம் செய்வதாக மருத்துவரிடம் ஒப்புதல் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து மாணவரின் முக்கிய உடல் உறுப்புகளான கண்கள், கல்லீரல், ஆகிய உறுப்புகளை வேலூர் சி.எம்.சி மருத்துவமனையும், இதயம், நுரையீரல் ஆகியவற்றை சென்னை போர்டீஸ் மலர் மருத்துவமனையும், ஒரு சிறுநீரகம் சிம்ஸ் மருத்துவமனையும், மற்றொரு சிறுநீரகத்தை மியாட் மருத்துவமனையும் தானமாக பெற முன் வந்ததை தொடர்ந்து வித்யாசரணின் உடல் உறுப்புக்கள் தனித்தனியாக குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் சிறுவன் வித்யாசரண் உடலுக்கு நெகிழ்வுடன் அஞ்சலி செலுத்தினர்.
- இரா.பகத்சிங்