சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை 126 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். இதில் ஆண்கள் 64 பெண்கள் 62 ஆகும். கிராமபுறத்தில் இருக்கும் இந்தப்பள்ளி கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானதால் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தொடர் மழையால் வகுப்பறைகள் அனைத்திலும் கட்டத்தின் மேற்கூரை வழியாக மழை தண்ணீர் உள்ளே புகுந்து ஒழுகி மாணவர்கள் வகுப்பறைகள் அமரமுடியாமல் உள்ளது. மழையால் ஓட்டு கட்டிடத்தில் ஓடுகள் உடைந்து கீழே விழுந்துள்ளது. அப்போது வகுப்புகள் நடைபெறாததால் மாணவர்கள் ஆபத்திலிருந்து தப்பியுள்ளனர். தற்போது கரோனா முடிந்து அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரும் நிலையில் வகுப்பறைகள் இல்லாமல் சேதமடைந்த கட்டிடத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாணவர்கள் இடம் பற்றாகுறையால் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் ஊராட்சியில் அனுமதி பெற்று இ சேவை மையத்தில் 1-ம் வகுப்பு மற்றும் 2- ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் ஆழ்வார் தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் கட்சியினர் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று சேதமடைந்த வகுப்பறைகளை ஆய்வு செய்தனர். அப்போது பள்ளி கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும், தொடர்ந்து இரு நாட்கள் மழை பெய்தால் கட்டிடம் வகுப்பறைக்குள் இருக்கும் மாணவர்கள் மீது விழுந்து பெரிய ஆபத்தை ஏற்படும். எனவே இந்தப் பள்ளிக்கு மாணவர்களை இனிமே அனுப்பமாட்டோம் என்றும் கூறுகின்றனர்.
பள்ளியில் பயிலும் மாணவரின் பெற்றோர் விஜயலட்சுமி கூறுகையில், புறவழிசாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால் புதிய கட்டிடம் கட்ட முடியாது என்று கூறுகிறார்கள். அதுவரை நல்லமுறையில் உள்ள வாடகை கட்டிடத்தில் வகுப்புகளை நடத்த வேண்டும். இதே போன்று குறிஞ்சிபாடியில் சேதமடைந்த கட்டிடத்தில் வகுப்பு நடைபெற்றதால் உயிர் பலி ஏற்பட்டது. அதே போன்ற விபத்து நடைபெறாமல் இருக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தற்போது அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் மாணவர்களைச் சேர்த்து வருகிறார்கள். அரசு பள்ளிகளில் கல்வி தரம் உயர்ந்து வரும் இந்நிலையில் இது போன்று சேதம் அடைந்த கட்டிடம் அடிப்படை வசதிகள் இல்லையென்றால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் எனவே அரசுப் பள்ளிகளை அரசு பாதுகாக்க வேண்டும். உடனடியாக மாற்று இடத்தில் புதிய கட்டிடமோ அல்லது வாடகை கட்டிடத்தில் பள்ளியை நடத்த வேண்டும் என்றார்.