திருவண்ணாமலை நகராட்சி சார்பில் அரசு மாதிரி மழலையர் பள்ளி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு மாறியதால் சன்னதி தெருவில் உள்ள பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில் எல்.கே.ஜீ. முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்தப் பள்ளி கட்டிடங்கள் மிகமோசமான முறையில் உள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. மழைக்காலங்களில் வகுப்பறைக்குள் தண்ணீர் தேங்குகின்றன, சுவர்களில் மின்சாரம் வருகின்றன. போதிய கழிப்பறை வசதியில்லை என்பதோடு பழைய கட்டிடம் என்பதால் மேற்கூரையின் பூச்சுகள் பெயர்த்துக்கொண்டு கீழே விழுகின்றின. சுவற்றில் ஆங்காங்கு விரிசல் ஏற்பட்டு எப்போது விழும்மோ என பயத்தை ஏற்படுத்துகின்றன என முதலமைச்சர் தனிப்பிரிவு தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை புகார் தந்துள்ளார்கள். கடந்த டிசம்பர் மாதம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை நேரில் சந்தித்து குழந்தைகளுடன் சென்ற பெற்றோர்கள் பள்ளி கட்டிடத்தை மாற்றி தரவேண்டும்மென கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
இந்த கல்வியாண்டு தொடக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு கல்வித்துறை சார்பில் பள்ளியை எங்காவது வாடகை கட்டிடத்தில் இயக்கலாம் என வாடகைக்கு இடம் தேடியுள்ளனர் பள்ளி ஆசிரியர்கள். நகராட்சி அதிகாரிகள் அதெல்லாம் வேண்டாம் இங்கேயே பள்ளி நடக்கட்டும் எனச்சொல்லி முட்டுக்கட்டை போட்டதாக ஆசிரியர்கள் தரப்பில் கூறுகின்றனர். சமீபத்தில் திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து மூன்று குழந்தைகள் பலியான பின்பு இந்த பள்ளி கட்டிடங்களை நினைத்து பெற்றோர்கள் கவலை அடைந்தனர். அப்போது முதலமைச்சரின் உத்தரவுப்படி பழைய கட்டிடங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், இந்த கட்டிடம் மோசமான நிலையில் உள்ளது, அதிலும் ஓட்டுக்கட்டிடம் கட்டப்பட்டு 110 ஆண்டுகள் ஆவதால் இதனை இடிக்க வேண்டும் என அறிக்கை தந்துள்ளனர். அறிக்கை பெற்றப்பின்பும் எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை, நகராட்சியும் எந்த அக்கறையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டுகிறார்கள் குழந்தைகளின் பெற்றோர்.
இந்நிலையில் தற்போது பிப்ரவரி 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 100 சதவிதம் மாணவ – மாணவிகள் வருகையை உறுதி செய்யவேண்டும் என்றதால் ஆசிரியர்கள் பிள்ளைகளை வரச்சொல்லியுள்ளனர். தற்போது பள்ளியில் சுமார் 534 பிள்ளைகள் படிக்கின்றனர், இவர்கள் தற்போது ஒரேநேரத்தில் பள்ளிக்கு வருகின்றனர். இதற்கு முன்பு வாரம் ஒருநாள் மட்டும் பள்ளிகள் இயங்கியது. அதாவது திங்கள் கிழமை ஒன்றாம் வகுப்புக்கு, செவ்வாய் கிழமை இரண்டாம் வகுப்புக்கு மட்டும், வெள்ளிக்கிழமை ஐந்தாம் வகுப்புக்கு மட்டும் என இயங்கியது. அந்த கிழமைகளில் மட்டும் அந்தந்த வகுப்பு பிள்ளைகள் வந்தால் போதும் என இருந்தது. இதனால் 100க்கும் குறைவான பிள்ளைகளே வகுப்புக்கு வந்தனர். அப்போது ஓரளவு நல்ல வகுப்பறையில் வைத்து பாடம் நடத்தினார்கள். இப்போது அனைத்து பிள்ளைகளும் வகுப்புக்கு இன்று முதல் வருகிறார்கள். மோசமான இந்த கட்டத்தை நினைத்தால் எங்களுக்கு அச்சமாக இருக்கிறது என்கிறார்கள் பெற்றோர்கள்.
இங்கு படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் ஏழைகள், தினசரி வேலைக்கு போனால்தான் சாப்பாடு என்கிற நிலையில் இருப்பவர்கள். இவர்கள் தங்களது கூலி வேலையை விட்டுவிட்டு தினமும் வந்து தங்களின் பிள்ளைகளின் உயிருக்கு பள்ளி கட்டிடத்தால் ஆபத்துள்ளது என்பதற்காக போராட முடியவில்லை. சிலர் மட்டும் பள்ளியில் குழந்தைகளின் தலைக்குமேலுள்ள ஆபத்தை உணர்ந்து மனு தருகிறார்கள். அரசு அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையை தருகிறது என்கிறார்கள் பெற்றோர்கள் சிலர்.