செல்போன் மோகம், விருதுநகரில் பிளஸ் 1 மாணவியின் உயிரைப் பறித்துள்ளது. விருதுநகரைச் சேர்ந்த கூலி வேலை செய்யும் கண்ணனின் மகள் மேனகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்துவந்தார். இன்று மேனகா வீட்டில் படித்துக்கொண்டிருந்தபோது, அவருடைய அம்மா வெளியே சென்று வருவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். அவர் வீடு திரும்பியபோது, மேனகா தூக்கில் தொங்கினார். உடனே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் மேனகாவை கீழே இறக்கி, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையின் மூலம் மேனகா இறந்தது உறுதி செய்யப்பட்டது.
விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலை குறித்து விசாரித்தபோது, மேனகா அடிக்கடி செல்போன் பார்த்து வந்ததைப் பெற்றோர் திட்டிய விபரம் தெரியவந்துள்ளது. இதனால் ஏற்பட்ட விரக்தியால்தான், மேனகா தற்கொலை செய்துகொண்டார் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இன்று (10-ஆம் தேதி) பிளஸ் 1 தேர்வு எழுத வேண்டிய நிலையில், நேற்றிரவு (9-ஆம் தேதி) மேனகா தற்கொலை செய்துகொண்டது, கண்ணனின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.