Skip to main content

பாரா ஒலிம்பிக் போட்டி - 2024: பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்!

Published on 25/09/2024 | Edited on 25/09/2024
Para Olympics 2024 CM gave incentives to medal winners

பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனையர்கள் துளசிமதி, நித்திய ஸ்ரீ, மனிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25.09.2024) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “விளையாட்டுத் துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரியப் பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

Para Olympics 2024 CM gave incentives to medal winners

மேலும், மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை’யை உருவாக்கியது. சர்வதேச விளையாட்டுப் போட்டிகளைத் தமிழ்நாட்டில் நடத்திடத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வீரர் வீராங்கனைகளுக்கும் தலா 7 இலட்சம் ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாகத் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.

இதனையடுத்து 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை துளசிமதிக்கு 2 கோடி ரூபாய், வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனைகள் நித்ய ஸ்ரீ மற்றும் மனிஷா ஆகியோருக்கு தலா 1 கோடி ரூபாய், ஆடவர் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள் வீரர் மாரியப்பனுக்கு 1 கோடி ரூபாய் என உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார். மாரியப்பன், 2016 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கமும், 2020ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 2024 பிரான்சு நாட்டின் பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் எனத் தொடர்ச்சியாக மூன்று பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்