வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சைனகுண்டா சேதனை சாவடியில் தமிழக வனத்துறையினர் அக்டோபர் 19ந்தேதி இரவு வாகன சோதனையில் ஈடுப்பட்டுக்கொண்டு இருந்தனர். வாகன சோதனையின்போது, குடியாத்தத்தை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவர் அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரது வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, அவர் கொண்டு வந்த ஒரு பையில் அரிய வகை வன விலங்கான எறும்பு திண்ணியை கொன்று அதன் உடலை வெட்டி, உடல் பாகங்களை பையில் போட்டு எடுத்துவந்ததை பார்த்து அதிர்ச்சியாகினர். சட்டவிரோதமாக எறும்புத்திண்ணியை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை பறிமுதல் செய்தனர்.
அவரை கைதுசெய்த வனத்துறையினர் அவரிடம் விசாரித்தபோது, எறும்புத்திண்ணி கறியை பலர் விரும்பி உண்கின்றனர். அதற்காகவே அதை வேட்டையாடினேன் என்றுள்ளார். கைது செய்யப்பட்ட முகமது இலியாஸ் சொல்வது உண்மை தானா என குடியாத்தம் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்மை குறைவுக்கு மருந்தா ?
எறும்பு திண்ணியில் 8 வகையானது உள்ளது. இந்த எட்டு வகை எறும்பு திண்ணியின் உணவே எறும்பு, ஈசல், கரையான்களை தான் உண்ணும். எதிரிகளை பார்த்தால் தனது தலைலை உள் இழுத்துக்கொண்டு பந்து போல் மாறி ஓடிவிடும் தன்மை கொண்டது. இதன் தோல்கள் மிகவும் கடினமானது. இந்த தோலுக்காகத்தான் எறும்பு திண்ணிகள் கடத்தப்படுவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
எறும்பு திண்ணியின் தோல்களை வைத்து மருந்து தயாரிக்கலாம், சிட்டுக்குருவி லோகியம் போல் இதுவும் ஆண்மை குறைவுக்கு சிறந்த மருந்து என எறும்பு திண்ணியின் தோலுக்கு காரணம் சொல்வதால் வியட்நாம், மலேசியா, சீனாவில் இதற்கு கடும் கிராக்கி. வெப்ப மண்டல நாடுகளில்தான் எறும்புதிண்ணி உயிர் வாழும் என்பதால் இந்தியாவில் உள்ள இதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். உண்மையில் எறும்புதிண்ணி தோல் மருந்து உற்பத்தி செய்ய முடியாது என்கிறதாம் அறிவியல்துறை. தவறான புரிதலால் அது வேட்டையாடப்படுகிறது என்கிறார்கள்.