திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் மிருகண்டாநதிக்கு அருகில் உள்ள காட்டில், 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டுடன் கூடிய நடுகல் இருப்பதை திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த முனைவர் எ.சுதாகர், சக்திவேல் மற்றும சிவா ஆகியோர் கள ஆய்வின்போது கண்டறிந்துள்ளனர்.
இந்த நடுகல் கல்வெட்டினைப் படித்துதந்த கல்வெட்டு அறிஞர் சு. ராஜகோபால் கூறுகையில், "இக்கல்வெட்டு விக்கரம பாண்டியனின் 4வது ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டது என்று தெரிவித்தார். மேலும், இதில் ஜெயவனத்தானிப்பாலை உடையான் அண்ணான்டை என்கிற வன்னிய நாடாழ்வான் மகன் திருமலை அழகியார், சமுத்திரம் என்ற இடத்திலிருந்து மாட்டை கவர்ந்து வரும்போது பிரண்டை என்ற இடத்தில் இறந்து போனதாக இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டு உள்ளூர் வழக்கில் எழுதப்பட்டுள்ளது. இதில் உள்ள வாக்கியங்கள் உள்ளுர் வழக்கில் அமைந்துள்ளது. 'வருகையிலே' என்பதற்குப் பதிலாக 'வருகைச்சிலே' என்றும் 'இறந்துபோனார்' என்பதற்கு 'மீண்டு எய்திரார்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இந்நடுகல் பற்றி தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் கூறுகையில், "இக்கல்வெட்டு உள்ள வீரனின் உருவம் அம்பை எய்தும் அமைப்புடனும் கச்சையில் குத்துவாளும் உள்ளவாறு அமைந்துள்ளது. இதில் மாட்டின் உருவம் ஏதும் இல்லை.
கல்வெட்டுடன் கூடிய நடுகற்கள் 13ஆம் நூற்றாண்டுக்கானது. இது இப்படிக் கிடைப்பது அரிது. இக்கல்வெட்டு அமைந்துள்ள கலசப்பாக்கம் பகுதியில் மஞ்சுவிரட்டு என்ற பண்பாட்டுத் திருவிழா பண்டைய காலம் முதல் நடைபெற்று வருகிறது. அதற்குச் சான்றாக கெங்கவரத்தில் மாட்டுவீரன் சிற்பம் கொண்ட 17 ஆம் நூற்றாண்டு நடுகல் அண்மையில் கிடைத்தது. இப்பகுதியில், மஞ்சுவிரட்டு என்கிற பண்பாட்டுத் திருவிழா நடைபெற்று வருவதற்கு இந்நடுகற்கள் சான்றாக விளங்குகின்றன" என்றார்.