
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கொத்தமங்கலம் பஞ்சாயத்து கொக்கரக்குடியை சேர்ந்த விவசாயிகள் கனகராஜ் மற்றும் ரவிச்சந்திரன். இவர்களின் தோட்டத்திற்குக் குடிநீர் குழாய் பதிக்கத் தடையில்லா சான்று வழங்க 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை கொத்தமங்கலம் பஞ்சாயத்துத் தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் சண்முகம், ஊராட்சி செயலாளர் ராஜு ஆகியோர் லஞ்சமாகப் பெற்றுள்ளனர். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 பேரையும் கையும் களவுமாகக் கைது செய்தனர்.
இந்தநிலையில் பஞ்சாயத்துத் தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் சண்முகம் ஆகியோர் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார். மேலும் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் ராஜுவை சஸ்பெண்ட் செய்து பவானிசாகர் வட்டார வளர்ச்சி அதிகாரி விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்பின் கொத்தமங்கலம் பஞ்சாயத்துக்கு நிர்வாக அலுவலர்களாக பவானிசாகர் வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் மண்டல வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.