கடலூர் மாவட்டம் வட்டத்தூர் ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி, ரூ20 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேத்தியா தோப்பு அருகே வட்டத்தூர் ஊராட்சி தலைவராக இருப்பவர் அமராவதி. இந்த ஊராட்சியின் செயலாளராக இருப்பவர் பழனிச்சாமி(40). இந்த ஊராட்சியில் தற்காலிக டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன் (21). இவருக்கு நிரந்தரப் பணி ஆணை வழங்கவும், சம்பள உயர்வு, நிலுவை தொகை போன்றவை வழங்கவும் ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி ஆபரேட்டர் மணிகண்டனிடம் ரூ.1 லட்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து கடந்த 21ஆம் தேதி மணிகண்டன், கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார், அவரிடம் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரம் பணத்தை அளித்து, அதை ஊராட்சி செயலாளர் பழனிச்சாமியிடம் தருமாறு கூறியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று, டேங் ஆபரேட்டர் மணிகண்டனின் தம்பி மகேஷ்(19) ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி வீட்டுக்குச் சென்று முதல் தவணை என்று கூறி ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தைக் கொடுத்துள்ளார். அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீஸார் பழனிச்சாமியை கைது செய்தனர்.