திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் பகுதியில் பழங்குடியினருக்காக, பஞ்சமி நிலம் சுமார் 10 ஏக்கர் நிலம், இருளர் இன மக்களான, ஏழுமலை, ராமன், சின்னதுரை ஆகியோர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலத்தை அதேபகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியினரான, வெங்கட்ராமன் உள்ளிட்ட நபர்கள் மோசடி செய்து பஞ்சமி நிலத்தை அபகரிப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் தங்களின் நிலத்தை மீட்டுக் கொடுக்குமாறு பழங்குடி இருளர் இன மக்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணியிடம் முறையிட்டுள்ளனர். அந்த முறையீட்டின் அடிப்படையில், இருளர் இன மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தரக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு அளித்தது.
![thiruvannamalai](http://image.nakkheeran.in/cdn/farfuture/nsMl_eymc1MwDTBKpIy5y37XDoo1K21hNc4RUx9XHoA/1569986748/sites/default/files/inline-images/08_1.jpg)
ஆனால், நில ஆக்கிரமிப்பாளர்கள், பழங்குடி இருளர் இன மக்களை வெளியே வரவிடாமல் தடுத்து மிரட்டி வைத்திருந்தனர். இதனை கண்டித்து செப்டம்பர் 30 ந்தேதி தீண்டாாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாநில, மாவட்ட தலைவர்கள் தலைமையில், நிலம் எங்களின் உரிமை என்ற முழக்கத்தோடு நில மீட்பு இயக்கத்தினை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தியது.
சாத்தனூர் அடுத்த கடப்பன்குட்டை பகுதியில், பழங்குடி இருளர் இன மக்களுக்கு உரிமையான பஞ்சமி நிலத்தை மீட்க, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தீஒமு மாநில துணை தலைவருமாக எஸ்.கே. மகேந்திரன், மாநில துணை பொதுச் செயலாளர் ப.செல்வன், சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் ஆகியோர் தலைமையில் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு வந்த காவல் துணை கண்காணிப்பாளர் சின்னராஜ், மற்றும் மேல் செங்கம் போலீசார், தண்டராம்பட்டு வட்டாட்சியர் நடராஜன், வருவாய் ஆய்வாளர் காளிதாஸ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஆகியோர், நில மீட்பு போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினர்.
இதில், இருளர் இன மக்களின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள வெங்கட்ராமனிடமிருந்து, வரும் 15 நாட்களுக்குள் மீட்டு நில உரிமையாளர்களான பஞ்சமர்களிடமே ஒப்படைக்கப்படும் என வட்டாட்சியர் எழுத்து பூர்வமான உத்தரவாதத்தை அளித்தனர்.