'பழனிக்கே பஞ்சாமிர்தமா... திருப்பதிக்கே லட்டா...' என்ற நகைச்சுவை சொல்லாடலை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இப்பொழுது பழனிக்கே பஞ்சாமிர்தம் வேண்டும் என்ற நிலை பக்தர்களை வாட்டியுள்ளது என்றே சொல்லலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவிலான பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வருகை எப்பொழுதுமே அதிகமாகக் காணப்படும். ஆனால் தற்போது சபரிமலை சீசன் என்பதாலும், அதேநேரம் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு காரணமாக விடப்பட்ட விடுமுறையாலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக பழனி கோவில் நிர்வாகத்தின் தேவஸ்தானம் சார்பில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் முழுவதுமாக விற்றுத் தீர்ந்த நிலையில் அங்கு பஞ்சாமிர்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் அடிவார பகுதியில் விற்கப்படும் பஞ்சாமிர்த கடைகளில் உள்ள பஞ்சாமிர்தங்களும் விற்றுத் தீர்த்துள்ளதால் அங்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் கிடைக்காமலேயே திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் தெரிவிக்கையில் “காலையிலிருந்து கால்கடுக்க நின்று தரிசனம் செய்துவிட்டு பஞ்சாமிர்தத்தை வாங்கலாம் என்று கடைக்குச் சென்றால் கடையிலும் கால்கடுக்க நின்றும் பஞ்சாமிர்தமே இல்லை. அடிவாரத்தில் உள்ள கடைகளிலும் பஞ்சாமிர்தம் இல்லை. என்னதான் கோவில் நிர்வாகமோ?” என சலித்துக் கொண்டு சென்றனர்.