நேற்று மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிந்த நிலையில், இன்று காலை தொடங்கிய மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தற்போது நிறைவடைந்துள்ளது.
இன்று நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டில் கருப்பண்ணசாமி கோவில் மாடு முதலிடம் பிடித்துள்ளது. திண்டுக்கல் ரமேஷ் என்பவரின் மாடு இரண்டாவது மாடாக தேர்வாகியுள்ளது. சிறந்த மாடுகளுக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. மொத்தம் ஒன்பது சுற்றுகளாக நடந்த போட்டியில் 860 காளை மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. 23 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் முதலிடம் பிடித்தார். சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. அதனையடுத்து 19 காளைகளை அடக்கிய மணிகண்டன் இரண்டாவது இடத்தை பிடித்தார். அவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. 15 காளைகளை அடக்கிய ராஜா மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்று வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பரிசுகளை வழங்கினார்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் படுகாயமடைந்த அரவிந்த் என்ற மாடுபிடி வீரர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்., சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.