திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்கதிர்கள் இன்று பெய்த ஒருநாள் மழையில் சாய்ந்ததால் அறுவடையை தொடங்க முடியாமல் பெருத்த சேதாரத்தை உண்டாக்கிவிட்டதாகவும் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
திருவாரூரில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சம்பா பயிரிடும் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. பணிகள் தொடங்கிய நாள் முதல் உரத் தட்டுப்பாடு, பயிர்களில் ஆணைக் கொம்பன் ஈ தாக்குதல் மற்றும் இலை சுருட்டல் புழு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை கடந்து சம்பா பணிகளை நடைபெற்று பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வந்தன.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்தது. மேலும் மழை தண்ணீர் நெற்கதிர்களை சூழ்ந்து காணப்படுவதால் பாடுபட்டு பயிரிட்ட நெற்பயிர்களை அறுவடை செய்வதற்கான பணியை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
நேரடி கொள்முதல் நிலையங்களை உரிய நேரத்தில் அரசு திறக்காததால் அறுவடை பணிகள் தாமதமாக செய்யும் நிலை ஏற்பட்டது. முன்கூட்டியே திறந்திருந்தால் அறுவடை பணிகள் முன்கூட்டியே துவங்கியிருக்கும். அரசின் அலட்சியமே எங்களின் வாழ்வாதரத்திற்கு தொடர்ந்து வேட்டுவைக்கிறது என்கிறார்கள் விவசாயிகள்.
மேலும், சாய்ந்துள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க முன்வர வேண்டும், அறுவடையை மேற்கொள்ள அரசு வழிவகைகளை செய்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.