"நெல் மூட்டைகள் நனைந்ததற்கு எந்த வகையிலும் விவசாயிகள் காரணமில்லை. எனவே ஈரப்பதம் குறித்த விதிகளைத் தளர்த்தி, நனைந்த நிலையில் உள்ள நெல் முட்டைகளைக் கொள்முதல் செய்ய வேண்டும்" எனக் கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றனர் டெல்டா விவசாயிகள்.
காவிரி பாசன மாவட்டங்களான டெல்டா மாவட்டங்களில், சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து, சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்குப் பெருத்த பாதிப்பு ஏற்படும் அவலமே இருக்கிறது. விரைந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என ஊருக்கு ஊர் போராட்டம் நடந்துவருகிறது. இதற்கிடையில் நாற்பது கிலோ சிப்பத்திற்கு நாற்பது ரூபாய் கேட்டு விவசாயிகள் அலைகழிக்கப்படும் அவலமும் அரங்கேறி வருகிறது.
இது குறித்து திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் விவசாயி கண்ணன் கூறுகையில், "நடப்பாண்டில் குறுவை பருவத்தில் நல்ல விளைச்சல், கூடுதல் லாபம் கிடைக்கும், கடந்த காலங்களில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவும், வாங்கியக் கடனை அடைக்கவும், இது உதவும் என்று கனவு கண்டிருந்தோம். ஆனால், அது கனவாகவே முடிந்துவிட்டது. எதிர்பாராத விதமாகப் பெய்த கன மழையால், அறுவடை செய்து, கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் முழுவதும் நனைந்து எங்கள் கனவைச் சிதைத்துவிட்டது.
மழையில் நனைந்த நெல் மூட்டைகள் சேதமடைந்து விட்டதைப் பகுப்பாய்வு செய்வதை விட பாதிப்புக்குத் தீர்வு காண்பதும், இனி அத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுப்பதும் தான் சரியானதாக இருக்கும். நெல் மூட்டைகள் நனைந்ததற்கு எந்த வகையிலும் விவசாயிகள் காரணமில்லை. எனவே ஈரப்பதம் குறித்த விதிகளைத் தளர்த்தி நனைந்த நிலையில் உள்ள நெல் முட்டைகளைக் கொள்முதல் செய்ய வேண்டும்." என்றார்.