அரசு உதவி பெறும் கல்லூரியான சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் அடிப்படையில் அக்கல்லூரியின் செயலாளர் துரைக்கண்ணு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் அனுராதா மாணவர்களை சாதிப் பெயரை குறிப்பிட்டுப் பேசிய உரையாடல் ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
தமிழ்த்துறை தலைவர் அனுராதா கல்லூரி மாணவனிடம் பேசியதாக வெளியான ஆடியோவில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசும் அனுராதா 'நிறைய தப்பு நடக்குது இந்த துறையில... நீ நல்லபையன்னு எல்லாரும் சர்டிபிகேட் கொடுத்தாங்க அதான் உன்னிடம் கேட்கிறேன். நீ என்ன கம்யூனிட்டிபா' என கேட்க, மாணவன் ஒரு சாதியை குறிப்பிட்டு 'நான் அதுல வரேன் மேம்' என்று பதில் சொன்னான். அதற்கு 'அதான் மூஞ்சிலேயே எழுதி வைத்திருக்கு நீ தப்பு பண்ணமாட்டேனு. எந்த கம்யூனிட்டியால பிரச்சனைன்னு உனக்கு தெரியுமா?' என அனுராதா கேட்க, 'புரியுதுங்க மேம்' என்றான் மாணவன்.
மேலும் மாணவர்கள் பலர் பெயர்களை குறிப்பிட்டு பேசிய அனுராதா, ஒரு மாணவன் பெயரையும், ஒரு குறிப்பிட்ட சாதியின் பெயரையும் குறிப்பிட்டு, 'அவன் அந்த சாதியா? அவனை நம்பலாமா? என கேட்க, 'அவன் அந்த கம்யூனிட்டியை சேர்ந்த மாணவன்தான் மேம் ஆனால் அவன் தவறுகள் செய்யமாட்டான் மேம்' என்றான் அந்த மாணவன்.
நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் நிகழ்ந்த இந்த சர்ச்சையை அடுத்து நீதியரசர் ராஜு அனுமதியுடன் இந்த பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.