Skip to main content

“படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பதா?” - பா.ரஞ்சித் கண்டனம்

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

 pa Ranjith has condemned the filing of a case against  assistant director

 

“படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராக வழக்கு தொடுப்பதா” என இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இந்து கடவுளை இழிவுப்படுத்திவிட்டதாகக் கூறி பாரத் இந்து முன்னணி எனும் அமைப்பின் நிர்வாகி ஒருவர் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநரும் கவிஞருமான விடுதலை சிகப்பி என்பவர் மீது புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் விடுதலை சிகப்பி மீது வழக்குப் பதிவு செய்ததற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் 'மலக்குழி மரணம்' எனும் தலைப்பில் கவிஞர் விடுதலை சிகப்பி எனும் விக்னேஸ்வரன் கவிதை ஒன்றை வாசித்திருந்தார். அக்கவிதை, நாடு முழுக்கத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவதாகும். அத்தகைய மரணங்களைக் கண்டும் காணாமல் போகும் சமூக நிலையைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காகச் சாதாரண மனிதர்களுக்குப் பதில் கடவுள் ஸ்தானத்தில் இருப்பவர்கள் அத்தகைய வேலையைச் செய்து மரணத்தைத் தழுவினாலாவது கவனம் பெறுமோ என்கிற பொருளில் அந்தக் கவிதை இருந்தது. எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரம் அது. மற்றபடி எந்த நம்பிக்கையையும் திட்டமிட்டு இழிவாக எழுதுவதோ பேசுவதோ கவிதையின் நோக்கமல்ல.

 

அப்படி இருக்கும்போது, பிறப்பால் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவரான விடுதலை சிகப்பி என்கிற விக்னேஸ்வரனை 'வேற்று மதத்தைச் சேர்ந்தவன் இந்து மதத்தைப் பழிக்கிறான்' என்கிற பொய் பிரச்சாரத்ததை இணையத்தில் சில குழுக்கள் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து செய்து வந்ததின் தொடர்ச்சியாக விடுதலை சிகப்பி என்கிற விக்னேஸ்வரன் மீது ஐந்து பிரிவுகளில் E4 அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது. தனி நபரின் படைப்புச் சுதந்திரத்தை மதப் பிரச்சினையாக மாற்றும் செயலை ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொருவரும் எதிர்க்க வேண்டி இருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக தனிப்பட்ட முறையில் விடுதலை சிகப்பி இக்குழுக்களால் மிரட்டப்படுகிறார்; இக்குழுக்கள் கொடுக்கும் அழுத்தத்தால் கடந்த மூன்று நாட்களாக விடுதலை சிகப்பியின் கிராமத்தில் இருக்கும் பெற்றோர் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

 

ஒரு படைப்பின் மையப்பொருளை விளங்கிக்கொள்ளாமல் அல்லது விளங்கிக்கொள்ள விரும்பாமல் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராக தொடுத்த வழக்கைப் பதிவு செய்திருக்கும் காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. இக்கவிதையின் பாடுபொருள் மலக்குழி மரணம் பற்றியது, உண்மையில் அவைதான் பேசுபொருளாகியிருக்க வேண்டும். அதைத் திசை மாற்றி இதை மதப் பிரச்சினையாக உருமாற்றும் நடவடிக்கையை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாகக் கண்டிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்