ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் வெளிநாட்டு நிதி பெற அனுமதி அளித்து அதன் மூலம் லாபமடைந்தார் என்கிற குற்றச்சாட்டின் கீழ் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், மத்திய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு நீண்ட இழுபறிக்கு பின் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது பழிவாங்கும் செயல், போலி என்கௌண்டர் வழக்கில் முக்கிய குற்றவாளி என முன்னாள் குஜராத் உள்துறை அமைச்சரும், தற்போதைய இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை 2009ல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அதற்கு பழிவாங்கவே இப்போது சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள் காங்கிரஸார்.
சிதம்பரத்தின் கைதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது. அதன்படி வேலூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா பேருந்து நிலையத்தின் அருகே சிதம்பரம் கைது செய்ததை கண்டித்து மத்திய அரசு பழிவாங்கும் போக்கை கைவிட கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர்.
திடீரென பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டும் மழையில் மறியல் போராட்டத்தில் காங்கிரஸார் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்து போலீசார் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.