Skip to main content

“மாவீரர்கள் காட்டிய வெளிச்சத்தில் தமிழீழம் பிறக்கும்!” வட அமெரிக்க நிகழ்வில் பெ. மணியரசன் பேச்சு!

Published on 30/11/2018 | Edited on 30/11/2018
p maniyarasan



“நாடு கடந்த தமிழீழ அரசு” சார்பில், வட அமெரிக்காவின் நியூயார்க்கில் 27.11.2018 அன்று மாலை “தமிழீழ தேசிய மாவீரர் நாள்” - வீரவணக்க நிகழ்வை நாடு கடந்த தமிழீழ அரசு  ஒருங்கிணைத்தது. இந்த நிகழ்ச்சியில் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் திரு. வி. உருத்திரகுமாரன் நினைவுரையாற்றினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் சிறப்புரையாற்றினார்.

பெ. மணியரசன் பேசுகையில்,

மாணவனாக இருந்தபோது, மாவீரர்கள் இப்படித் தோன்றுவார்கள் என நான் நினைத்ததில்லை. அப்போது, வட அமெரிக்க வல்லரசை எதிர்த்து வியட்நாமில் வீரஞ்செறிந்த போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அமெரிக்காவுக்கு எதிராக அந்த சின்னஞ்சிறு வியட்நாமிய மண்ணில் ஆண்களும், பெண்களும் போராடுகிறார்கள், உழவர்கள் போராடுகிறார்கள் என்று வந்த செய்திகள், எங்களுக்கு உற்சாகமளித்தன. அதுபோல், நம்மினத்திலும் வீரர்கள் தோன்றுவார்களா என்ற ஐயமும் ஏற்பட்டது.

 

ஆனால், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் களத்திற்கு வந்தபின், நான் வியந்து பார்த்த வியட்நாம் போராட்டத்தை விஞ்சும் அளவுக்கு, புதுப்புது வகைகளில் வீரப்போர் புரிந்த தமிழ் மறவர்களை - புலிகளைப் பார்த்துப் பெருமிதம் கொண்டேன்.

 

இந்த தமிழினத்தின் உள்ளாற்றல் வீரம் நிறைந்தது; அறிவாற்றல் நிறைந்தது; அறம் நிறைந்தது! அதன் எடுத்துக்காட்டுதான், தமிழீழ விடுதலைப்புலிகள்! அந்த மாவீரர்களுக்கு என்னுடைய தலைதாழ்ந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

 

மாவீரர்களே, நீங்கள் வாழ்ந்தபோது பகைவன் உங்களைக் கண்டு அஞ்சி நடுங்கினான்! நீங்கள் மறைந்த பிறகும்கூட, உங்கள் கல்லறைகளைப் பார்த்து பகைவன் அஞ்சுகிறான்! அதனால்தான், மாவீரர் துயிலும் இல்லங்களை சிங்களர்கள் சிதைக்கிறார்கள்; அதற்காக சதி வேலைகளிலும், வன்முறைகளிலும் இறங்குகிறார்கள்.

 

ஆனாலும், நீங்கள் கோடிக்கணக்கான தமிழர் நெஞ்சங்களில் வாழ்கிறீர்கள்! துயிலும் இல்லங்களில் மட்டும் உங்கள் நினைவுகள் இல்லை! தமிழீழத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள அத்தனைக் கோடி தமிழர் நெஞ்சங்களிலும் நீங்கள் வாழ்கிறீர்கள்! சுடர்விட்டு எரிந்து கொண்டு, வழிகாட்டிக் கொண்டிருக்கிறீர்கள்! புதிய நம்பிக்கையை ஊட்டிக் கொண்டிருக்கிறீர்கள்! நம்முடைய கனவு பலிக்கும் - தமிழீழம் பிறக்கும்!

 

நம் தமிழினத்தின் அடையாளம் உலகுக்கு உங்களால்தான் எடுத்துக்காட்டப்பட்டது. வரலாற்றில் நீங்கள் எப்போதும் தனி இடம் பெற்றிருப்பீர்கள்!

p maniyarasan

தமிழீழ விடுதலைக்காக தமிழீழத்தில் நடந்த ஈகங்கள் கொஞ்ச நஞ்சல்ல; அந்த தியாகங்களை நடத்திக் கொண்டே, மக்கள் ஒருங்கிணைந்தார்கள். ஒரு தலைமையின் கீழ் ஒருங்கிணைந்தார்கள். பொய் வாக்குறுதி - போலி வேடங்கள் போடும் தலைமையின் கீழ் அல்ல! பல பிரிவுகள் இருந்தாலும், இலட்சியத்தில் உறுதியானவர் பிரபாகரன் என்று உணர்ந்து, அவரது தலைமையின் கீழ் ஒருங்கிணைந்தார்கள். தலைவரின் சொல்லை மந்திரம் போல் மக்கள் கருதி னார்கள்.

 

இன்றைக்கும், இவ்வளவு ஈகங்களுக்குப் பிறகும் “தலைவர் பிரபாகரன்”, தற்போது ஒரு தெய்வம் போல உலகத் தமிழர்களால் நேசிக்கப்படுகிறார் அவரது அறிவாற்றல்; ஈகம்; தன் குடும்பத்தையே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திய அவரது அர்ப்பணிப்பு ஆகியவை இதற்குக் காரணம்!

 

வரலாற்றில் நாம் சில பின்னடைவுகளை சந்தித்திருக்கலாம். ஆனால், தலைவர் பிரபாகரன் தான் தலைமை வழிகாட்டி என்று இன்னும் கூடுதல் மதிப்போடு அனைவரும் பாராட்டும் நிலைமைதான் இன்றிருக்கிறது.

 

தமிழீழத்தில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் தியாகங்கள் நடந்துள்ளன. 1995இல் அப்துல் ரவூப் என்ற இளைஞன் சிங்கள விளையாட்டு அணி தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது என்று தீக்குளித்து உயிரீகம் செய்தார். அதன்பின், 2009இல் தமிழீழத்தில் போர் நிறுத்தம் வர வேண்டுமென தழல் ஈகி முத்துக்குமார் தொடங்கி வைத்த மாபெரும் எழுச்சியின்போது, பள்ளப்பட்டி இரவி, சீர்காழி இரவிச்சந்திரன், சென்னை அமரேசன், கடலூர் தமிழ்வேந்தன், சென்னை சிவப்பிரகாசம், விருதுநகர் கோகுலகிருஷ்ணன், வாணியம்பாடி சீனிவாசன், சதாசிவம் சிறீதர், நாகலிங்கம் ஆனந்த், அரியலூர் இராசசேகர், புதுக்கோட்டை பாலசுந்தரம், சிவகாசி மாரிமுத்து, கரூர் சிவானந்தன், திருப்பூர் சுப்பிரமணி ஆகிய 18 தமிழர்கள் தீக்குளித்து உயிரீகம் செய்தனர். சுவிட்சர்லாந்தில் முருகதாசும், மலேசியாவில் இராஜாவும் உயிரீகம் செய்தனர். இவ்விருவரும் தமிழீழத் தமிழர்கள்!

 

இதுமட்டுமல்ல, பல பேர் தங்கள் சொத்துகளை இழந்தார்கள். தடா, பொடா போன்ற கொடுஞ் சட்டங்களை ஏவி பெருஞ்சித்திரனார், பழ. நெடுமாறன், வைகோ போன்ற பல தலைவர்களை சிறையிலே அடைத்தார்கள். 2009ஆம் ஆண்டு, போர் நிறுத்தம் கேட்டாலே, புலிகள் ஆதரவாளர் என சிறையில் தள்ளினார்கள். அரசுக்கு எதிராகச் சதி எனக் குற்றம்சாட்டி 124ஏ  - பிரிவில் வழக்குப்போட்டார்கள். என்னையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். சென்னை, வேலூர், கோவை, திருச்சி சிறைகளில் நான் இருந்திருக்கிறேன்.

 

பலர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அமெரிக்காவிலும் பலரை சிறையில் போட்டார்கள். சாக்ரடீஸ் என்ற தமிழர் இங்கே சிறையில் அடைக்கப்பட்டார். விசுவநாதன் என் தமிழின உணர்வாளர் அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தபிறகு, மீண்டும் திரும்ப முடியவில்லை! பொறியாளர் - முனைவர் தணிசேரன் அவர்கள் தமிழ்நாட்டுக்குப் போக நிரந்தரத் தடை போட்டுள்ளார்கள்.

 

இவ்வளவு ஈகங்கள் செய்தாலும், எங்களால் போர் நிறுத்தம் கொண்டு வர முடியவில்லையே என்ற ஏக்கமும், தன் திறனாய்வும் இருக்கிறது. எட்டுக் கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்தும், போர் கொடுமையிலிருந்து தமிழீழ மக்களைப்  பாதுகாக்க முடியவில்லையே என்ற துயரம் எப்போதும் எங்கள் நெஞ்சில் கனன்று கொண்டிருக்கிறது.

 

இந்த உணர்வு, தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருந்ததைவிட மிகப்பெரும் அளவுக்கு தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகப் போராட ஊக்கமளிக்கும்! உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், “கடல் நம்மைப் பிரித்தாலும் அன்னைத் தமிழ் நம்மை இணைக்கிறாள்” என்பார். நம் அனைவரையும் தமிழ்தான் இணைக்கிறது! இணைத்துக் கொண்டிருக்கிறது!

 

தமிழீழ விடுதலைப்புலிகள் இந்திய ஆட்சியாளர்களைப் பகைத்துக் கொண்டார்கள், அதனால்தான் வெற்றி பெற முடியவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளும், தலைவர் பிரபாகரன் அவர்களும் எப்போதும் இந்தியாவுடன் பகைப் போக்கைக் கடைபிடிக்கவே இல்லை!

 

1987இல், இந்தியா தன்னிச்சையாக இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்ட போதுகூட, புலிகள் இந்தியாவைப் பகைத்துக் கொள்ளவில்லை!
 

பிரபாகரன் முதலமைச்சர் ஆகிவிட்டால் எல்லாம் நடந்திருக்கும் என்று கூறுபவர்களும் உண்டு! இன்றைக்கு, வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் அவர்களால் என்ன உரிமையைப் பெற்றுத் தர முடிந்தது? வரதராசபெருமாள் போல் திணிக்கப்பட்டவர் அல்ல - விக்னேசுவரன்! தமிழ் மக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர்! தனது அலுவலகத்துக்கு ஒரு நாற்காலி வாங்க வேண்டுமென்றாலும்கூட, கொழும்பைத்தான் கேட்க வேண்டும் என்ற நிலை இருப்பதாகக் கூறுகிறார் அவர்.

 

கடந்த 2016 செப்டம்பர் 24ஆம் நாள், தமிழீழத்தில் மிகப்பெரும் மக்கள் பேரணியை நடத்திய விக்னேசுவரன் அவர்கள் சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார். அதில் முதல் தீர்மானம் - சிங்களர்களே வசிக்காத தமிழீழப் பகுதிகளில் புதிதாக புத்தக் கோயில்கள் வைக்கப்படுகின்றன, அதைத் தடுக்க வேண்டும் என்கிறார். புதிதாக அங்கு நிறுவப்படும் புத்த கோயில்களைத் தடுக்கும் அதிகாரம்கூட அங்குள்ள முதலமைச்சருக்கு இல்லை!

 

அடுத்து, இரண்டாவது தீர்மானமாக - தமிழீழ மண்ணில் சிங்களக் குடியேற்றங்களைத்  தடுக்க வேண்டும் என்கிறார். அதைத் தடுக்கும் அதிகாரமும் அவருக்கு இல்லை! 

 

மூன்றாவதாக, சிங்கள இராணுவம் தமிழீழத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்கிறார். அவர் மட்டுமல்ல, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அமைத்த மூவர் குழுவும் தமிழர் பகுதிகளைவிட்டு சிங்கள இராணுவம் வெளியேற வேண்டுமெனச் சொன்னது. ஆனால், ஏன் நடக்கவில்லை? யார் இதைச் செயல்படுத்துவது? இலங்கைக்குத் துணை நிற்கும் இந்தியா, வட அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இதற்குக் குரல் கொடுப்பார்களா? மாட்டார்கள்!

 

நான்காவதாக, ஐ.நா. மனித உரிமை அவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தின்படி தமிழீழப் படுகொலைக்கு ஒரு விசாரணை வேண்டும் என்கிறார். பன்னாட்டு விசாரணை கிடையாது, உள்நாட்டு விசாரணைதான் என்று ஐ.நா. மனித உரிமை அவையிலே தீர்மானமெல்லாம் போட்டர்கள். ஆனால், அதுவும்கூட இன்றுவரை நடக்கவில்லை! அமெரிக்கத் தீர்மானம் எங்கே செயல்பட்டுக் கொண்டுள்ளது என்று திரும்பக் கேட்டீர்களா?

 

ஐ.நா.வின் உள்ளக அறிக்கையின்படியே, 6 மாத காலத்தில் சற்றொப்ப 70 ஆயிரம் தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறுகிறார்களே, மனித குலத்திற்கு எதிரான குற்றம் நடந்துள்ளதாக மூவர் குழு அறிக்கைக் குற்றம்சாட்டுகிறதே, அதுகுறித்தாவது ஐ.நா. விசாரித்ததா? நமக்கு நீதி கிடைத்ததா? இல்லை! ஐ.நா. மன்றம் ஏன் தலையிடவில்லை? 

 

கடந்த வாரம் நான் நியூயார்க்கிலுள்ள ஐ.நா. மன்றத் தலைமையகத்தைப் பார்க்கச் சென்றேன். அங்குள்ள ஒருவர் உலகில் எங்கு சிக்கல் நடந்தாலும் ஐ.நா. மன்றம் தலையிடும் என்று கூறினார். எங்கள் தமிழீழத்தில் ஐ.நா. மன்றம் தலையிடவில்லையே என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “தமிழீழச் சிக்கல் ஒரு உள்நாட்டுச் சிக்கல்” என்றார். 

 

எது உள்நாட்டுச் சிக்கல்? சூடானில் தெற்கு சூடானுக்கும் வடக்கு சூடானுக்குமான சிக்கலில் ஐ.நா. தலையிட்டு, கருத்து வாக்கெடுப்பு நடத்தி தெற்கு சூடானை தனிநாடாக்கியதே, அது உள்நாட்டுச் சிக்கல் என்று ஐ.நா. ஒதுங்கிக் கொண்டதா?  இந்தோனே சியாவில் கிழக்குத் தைமூர் சிக்கலில் தலையிட்டு, கிழக்குத் தைமூர் தனிநாடானதே அது உள்நாட்டுச் சிக்கல் என்று பார்த்தீர்களா? தமிழீழத்தில் நடைபெறுவது விடுதலைப்போர்! அது உள்நாட்டுச் சிக்கல் அல்ல!

 

வடக்கே உள்ள பல மதிக்கத்தக்க மனித உரிமைப் போராளிகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கண்டுகொள்ளவில்லை. போர் நிறுத்தம்கூட கேட்க வில்லை.

 

வடநாட்டில் மட்டுமல்ல, நமக்கு பக்கத்திலே உள்ள கேரளாவில், கர்நாடகாவில், ஆந்திராவில் தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக ஒரு சின்ன கண்டனம் கூட எழவில்லையே ஏன்? இவர்கள் அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட - ஒதுக்கப்பட்ட இனமாகத் தமிழர்கள் நாம் இருக்கிறோம்! இந்தியாவில் இனப்பாகு பாட்டுடன் நடத்தப்படுகிறோம் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  

 

அடுத்ததாக விக்னேசுவரன் இயற்றியத் தீர்மானம் - இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு கூட்டரசை உருவாக்க வேண்டுமென்பது! இதைக்கூட சாதிக்க முடியாத அதிகாரங்களை வைத்துக் கொண்டு, பிரபாகரன் தமிழர் மாகாண முதலமைச்சராகி இருந்தால் சிக்கல் தீர்ந்திருக்கும் என்று பேசுவது வேடிக்கையாக இல்லையா? 
 

நான் 1991இலிருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்குச் சென்று வருகிறேன். ஒருமுறை கனடாவில் அப்படிச் சென்றபோத, எரித்திரியா போராளிகள் வந்து சந்தித்தார்கள். இப்போது அவர்கள் தனிநாடு பெற்றுவிட்டார்கள்.

 

இதுபோல், உலகெங்கும் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பன்னாட்டு அரசியல் சூழலில் மாற்றங்கள் வரும்போது, பல  புதிய நாடுகள் பிறக்கத்தான் போகின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வலுவான அமைப்பும், ஆற்றல்மிக்க அரசியல் உத்தியும்தான் இன்றைக்குத் தேவை!

 

தமிழினம் உலகின் பெருமை மிக்க இனம்! நாம் மீண்டும் எழுவோம்! தமிழீழம் பிறக்கும்! நம் மாவீரர்களின் கனவு பலிக்கும்! மாவீரர்களே, நீங்கள் காட்டிய வெளிச்சத்தில் இது நடக்கும்! மாவீரர்களுக்கு வீரவணக்கம்!”. இவ்வாறு பெ. மணியரசன் பேசினார். 

சார்ந்த செய்திகள்