உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்திலும் கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் 485 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆரம்ப காலகட்டங்களில் தமிழகத்தில் ஏற்படும் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து தகவல் தெரிவித்து வந்தார். ஆனால் கடந்த ஒரு வாரமாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்தான் தினமும் செய்தியாளர்களை சந்தித்து கரோனா பாதிப்பு குறித்து விளக்கி வருகிறார். இதற்கிடையில் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு துல்லியமாக பதில் அளிக்கும் அவர், தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்தும், அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்தும் புள்ளிவிவரத்துடன் தெளிவாக விளக்குகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளர் தெளிவாகவும் தன்னம்பிக்கையுடனும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது!” என்று பதிவிட்டு பீலா ராஜேஷை வெகுவாக பாராட்டியுள்ளார்.
பீலா ராஜேஷ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன் என்பவரின் மகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.