கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நீர்வரத்து அதிகரித்து வருவதாலும், பாதுகாப்பு கருதியும், அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இந்த உபரி நீர், ஆக. 6ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி நிலவரப்படி, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்தடைந்தது. இங்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீராக வந்து கொண்டிருக்கிறது. போகப்போக நீர் வரத்தின் வேகம் அதிகரிக்கும். உபரிநீர், பிலிகுண்டுலுவில் இருந்து நேற்று மாலை ஒகேனக்கல் காவிரியை வந்தடைந்தது.
நேற்று காலை நிலவரப்படி, ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு ஆரம்பத்தில் 10 ஆயிரம் கன அடியாக இருந்தது. இந்நிலையில் நீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று காலை மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், அணைக்கு வினாடிக்கு 3625 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் 65.20 அடியாகவும், நீர் இருப்பு 27.87 டிஎம்சி ஆகவும் உள்ளது. கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்த சேரும் நிலையில், அணையின் நீர்மட்டம் வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.