Skip to main content

ஒட்டப்பிடாரம்; தி.மு.க.அலையில் மீளுவாரா கிருஷ்ணசாமி..?

Published on 11/11/2018 | Edited on 11/11/2018

 

k

   

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், அரசியல் கட்சிகள் தங்களது பலத்தை காட்ட முண்டாசு கட்டி வருகின்றன. அ.தி.மு.க.வை பொறுத்தவரை 20-20 என்பது அஜென்டா. அதற்காக எந்த லெவல் வரைக்கும் இறங்கி வேலை பார்ப்பதிலும், வேட்பாளர் தேர்விலும் கவனம் செலுத்தி வருகிறது.

 


  அ.தி.மு.க.வில் முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் சின்னத்துரை, மாஜி எம்.எல்.ஏ மோகன் ஆகியோர் எப்படியாவது “சீட்” வாங்கி விட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். அ.ம.மு.கவை பொறுத்தவரை பதவி இழந்த சுந்தர்ராஜூவே மா.செ.வாக இருப்பதால் அவருக்கே மீண்டும் சீட் கொடுக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது தவிர கடந்தமுறை தி.மு.க. கூட்டணியில் நின்று சுந்தர்ராஜிடம் தோற்ற புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் கம்பு சுற்றுவார். தி.மு.க.வும் தன்பங்கிற்கு வேட்பாளரை நிறுத்தும் என்பதால், ஒட்டப்பிடாரத்தில் 4 முனைப் போட்டி என்பது நிச்சயம்.

 

chi


    இந்த நிலையில், 10-11-2018 அன்று தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “அதிமுகவின் நிலைப்பாடே 20 தொகுதிகளிலும் இடைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான். யாரை நிறுத்தினால் வெற்றியை அறுவடை செய்யலாம் என்பதற்காகத் தான் கூட்டமே நடத்தப்பட்டது. ஒட்டப்பிடாரத்தை பொறுத்தவரை ரிசர்வ் தொகுதி என்பதால், எல்லா கட்சியும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்களை தான் களம் இறக்கும். எனவே, மக்கள் செல்வாக்கு, பண பலம், சாதி சப்போர்ட் இது எல்லாத்தையும் கட்சித் தலைமை கவனத்தில் கொள்ளும்” என்று எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டதாக அவர் தெரிவித்தார்.

 

    கடந்தமுறை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜ், தி.மு.க. கூட்டணியில் களம் இறங்கிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமியை மிக சொற்ப வாக்குகளில் வென்றார். ஆனால், இந்த முறை களம் மாறி இருக்கிறது. அ.தி.மு.க.விலேயே 2 அணி நிற்பது அந்த அணிக்கு நல்லதல்ல என்பது, இரு அணியினருக்கும் பட்டவர்த்தனமாக தெரிகிறது.  இதுதவிர தி.மு.க.வும் களம் இறங்கும். புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் போட்டியிடுவார். எனவே, ஓட்டுக்கள் 4 அணியாக பிரியும் போது, தி.மு.க.வோ அல்லது புதிய தமிழகமோ எளிதில் வெற்றி பெறும்.

 

     இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த ஒருவரிடம் பேசினோம். ‘’ஒட்டப்பிடாரத்தை பொறுத்தவரை கடந்த முறையே  கிருஷ்ணசாமி வெற்றி பெற வேண்டியது. ஆளுங்கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றுவிட்டனர். இந்த முறை கண்டிப்பாக டாக்டர் ஜெயிப்பார். அ.தி.மு.க.வில் 2 அணிகள் நிற்கிறது. தி.மு.க.வும் போட்டியிடுகிறது. எனவே, கட்சியா? சமுதாயமா? என்று ஓட்டுப் போடுறவன்கிட்ட சிந்தனை தோன்றும். இந்த சிந்தனை கடைசியில் சமுதாயம் பக்கமே சாயும். எனவே எங்கள் வெற்றி உறுதி’’ என்றார்.


   அ.தி.மு.க.வை பொறுத்தவரை மோகன் உள்ளூர்காரர், முன்னாள் எம்.எல்.ஏ என்ற அடிப்படையில் சீட்டுக்காக காய் நகர்த்தி வருகிறார். அதேபோல், சின்னத்துரையும் எப்படியாவது சீட் பெற்றுவிட வேண்டும் என்பதில் மேல்மட்ட தலைவர்களிடம் நெருக்கம் காட்டி வருகிறார். இருவரிடமும் விட்டமின் ‘ப’ இருக்கிறது. எனவே இருவரில் ஒருவர் தான் வேட்பாளர் என்று பேசப்படுகிறது. அதிலும் மாஜி மோகனுக்கு அதிக வாய்ப்பு என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இருவரும் போட்டி போட்டு நிற்பதால், எதற்கு பிரச்சனை என்று 3-வது நபருக்கு வாய்ப்பு கொடுக்கவும் கட்சித் தலைமை திட்டமிட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ஏனெனில் இருவரில் ஒருவருக்குத் தான் சீட்டு கொடுக்க முடியும். சீட் கிடைக்காதவர் உள்ளடி வேலையில் ஈடுபடுவார் அல்லது அ.ம.மு.க.வுடன் இணைந்து செயல்படுவார். இதுவும் கட்சிக்கு சிக்கல். ஒருவேளை 2 பேரில் ஒருவர் நின்று ஜெயித்து வந்துவிட்டால், நம் பேச்சை கேட்க மாட்டார்கள் என்ற பயமும் கடம்பூராருக்கு இருக்கிறதாம். எனவே நம்ம பேச்சை கேட்கிற மாதிரி ஒருத்தரை களம் இறக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.  ஏனெனில், இடைத்தேர்தலை பொறுத்தவரை வேட்பாளர் செலவு பண்ண தேவையில்லை. கட்சித் தலைமையே செலவு செய்துவிடும் என்பதால் புதுமுக வேட்பாளருக்கு விட்டமின் ‘ப’ தேவையில்லை.


     அதேபோல், எந்த விதத்திலும் எதிரணிக்கு(அ.ம.மு.க.) தொகுதியை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்பதில் அ.தி.மு.க பெரும் முனைப்பு காட்டி வருகிறது. தி.மு.கவை பொறுத்தவரை முழுக்க முழுக்க கட்சி செல்வாக்கை நம்பியே களம் இறங்குகிறது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும்  ஏற்கனவே 2 முறை வென்ற தொகுதி. எனவே போட்டி என்பது கடுமையாகத் தான் இருக்கும். பலமான தி.மு.க. அலையிலிருந்து கிருஷ்ணசாமி மீளுவாரா..? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி..?

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி உறுதி? - வெளியான புதிய தகவல்! 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
ADMK DMDK Alliance Confirmed New information released

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது. அதே சமயம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தே.மு.தி.க. சார்பாகத் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் அ.தி.மு..க துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகம் மற்றும் புதுவை 40 மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வரும் 24 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைக்கிறார்” எனத் தெரிவித்தார்.

ADMK DMDK Alliance Confirmed New information released

இந்நிலையில் அ.தி.மு.க. - தே.மு.தி.க. இடையே கூட்டணி நாளை (20.03.2024) உறுதியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிவில் தே.மு.தி.க.வுக்கு 4 அல்லது 5 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, தொகுதி உடன்பாடு கையெழுத்தாக உள்ளது. அப்போது புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை தொகுதியும் ஒதுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகச் சென்னையில் எடப்பாடி பழனிசாமி உடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் சந்தித்து கூட்டணி தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

புதிய தமிழகம் கிருஷ்ணசாமியிடம் முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை 

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Former ministers talk to Krishnasamy

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கியுள்ளது. பாமக, தேமுதிக,புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சி அலுவலகத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து ஆலோசனை நடத்தி இருந்த நிலையில், தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்திற்கே சென்று ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.