257 வாக்குச்சாவடிகளைக் கொண்ட ஒட்டப்பிடாரத்தின் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு காலை நேரத்திலேயே விறுவிறுப்புடன் தொடங்கியது. பதற்றமான வாக்குச்சாவடிகள் சற்று அதிகம் என்பதால் தொகுதி முழுக்க சுமார் மூவாயிரம் போலீசார் தென்மண்டல ஜ.ஜி.யான சண்முக ரஜேஸ்வரனின் நேர் மேற்பார்வையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

வல்லநாடு கிராமத்தின் அரசுப் பள்ளியில் சுற்றுப்பட்டு கிராமத்தின் வாக்காளர்களுக்கான நான்கு வாக்கு சாவடிகள் உள்ளன. பதற்றமான வாக்குசாவடிகளில் 180 வது பூத் பிரச்சினைக்குரியது என்பதால் அங்கு கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு மாவட்ட எஸ்.பி.யான முரளி ரம்பாவின் கண்காணிப்பிலிருக்கிறது.

தொகுதியின் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவின் ஆரம்பத்தில் மின்னணு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு இயங்கின. குறுக்குச் சாலை அருகிலுள்ள வால சமுத்திரம், கிராம பூத்தில் ஆரம்பத்தில் வி.வி பேட் மக்கர் செய்யாததால் டெக்னீசியன் வரவழைக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது.

இதனால் அங்கு வாக்குப் பதிவு 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. ஒட்டநத்தம் கிராம வாக்குச்சாவடியின் கண்டரோல் யூனிட் திடீரென்று ரிப்பேர் ஆனதால் பின்பு அது சரிசெய்யப்பட்டது. அங்கு வாக்குப்பதிவு ஒரு மணிநேரம் வரை தாமதமானது. ஆனாலும் மதியம் ஒரு மணி நேர நிலவரப்படி ஒட்டப்பிடாரத்தின் வாக்குப்பதிவு 45.06 சதவிகிதம்.
