தமிழகம் முழுவதும் பிளஸ்- 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணிகள் புதன்கிழமை (அக்.14) தொடங்கின.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்- 2 பொதுத்தேர்வு நடந்தது. வழக்கமாக மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விடும். நடப்பு ஆண்டில் கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டன.
இதையடுத்து, மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்காக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணிகள் தமிழகம் முழுவதும் புதன்கிழமை (அக். 14) தொடங்கியது.
மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளியிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளவும், வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் பணிகளையும் வழக்கம்போல் அவர்கள் படித்த பள்ளியிலேயே செய்து கொள்ளவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அக்.14- ஆம் தேதி முதல் 15 நாள்களுக்குள் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ளும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஒரே பதிவு மூப்பு (சீனியாரிட்டி) வழங்கப்படும்.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, 324 பள்ளிகளைச் சேர்ந்த 35 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்கள், எங்கு படித்தார்களோ அந்தப் பள்ளியிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.
சான்றிதழ் பெறுவதற்காக பள்ளிக்கு வரும் மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகவலை சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.