தமிழ்த்தாய் வாழ்த்தின் அசல்பாடலை பாடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த தமிழாசிரியரின் மகனும், ஆட்டோ ஓட்டுனருமான ராமபூபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் "மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய அசல் பாடலிலிருந்து பல பகுதிகள் நீக்கப்பட்ட பிறகே, தற்போது பாடப்பட்டு வரும் பாடலானது 1968ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாகவும். இவ்வாறு பாடலை திருத்துவது, மாற்றியமைப்பது, சிதைப்பது என்பது தமிழ்மொழியின் கலாச்சாரம், பாரம்பரிய வரலாறு மட்டுமல்லாமல் அதை சார்ந்த மக்களையும் அவமதிக்கும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய முழுமையான தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைத்தான் பாடவேண்டுமென அரசு உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி மணிக்குமார், நீதிபதி பவானி சுப்பராயன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 50 ஆண்டுகளாக பாடப்பட்டு வரும் பாடலை அனைவரும் ஏற்று, மதித்து, மரியாதை செலுத்தி வருகின்றனர், அப்படியிருக்கும்போது மறுபடியும் முன்பிருந்த பாடலை கொண்டு வந்தால் அதற்கு எதிராக சிலர் போராடுவார்கள், எனவே இதுபோன்ற மனுக்களை அனுமதிக்க முடியாது என தெரிவித்துவிட்டனர்.