அண்மையில் நடந்து முடிந்த, விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. அதனையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (21/11/2021) நகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கப்படும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி இன்று முதல் திமுகவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது. விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட திமுக தலைமை அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உறுப்பினர் பதவிக்கு 10,000 ரூபாயும், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு 2,500 ரூபாயும் விருப்ப மனு கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. திமுகவின் இந்த விருப்ப மனு விநியோக அறிவிப்பால் விரைவில் நகராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் காலை10:30 மணிக்கு நடைபெறுகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில், அதில் திமுக நிலைப்பாடு குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.