கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பியது. அதுமட்டுமல்லாமல் இரண்டு வாரங்களில் விசாரித்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தீர்ப்பை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று கூறினார். அதில் அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையே நீடிக்கும். எடப்பாடி பழனிச்சாமி தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்துதான் அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டும். தனிக் கூட்டம் நடத்தக் கூடாது. பொதுக்குழுவை கூட்ட ஆணையாளர் நியமிக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தை நாடலாம். அதுபோல அந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஓ.பி.எஸ் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், போடி, தேனி, ஆண்டிபட்டி, கம்பம், சின்னமனூர் உள்பட சில பகுதிகளில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர் சையதுகான் கூறியதாவது, " ஓபிஎஸ் தற்போது புலியாக மாற வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி பணத்தாசை, பதவி ஆசைபிடித்தவர். சசிகலா முதலில் செங்கோட்டையனை தான் முதல்வராக ஆக்க நினைத்தார். அவர் ஏற்காததால் இவர் அந்த இடத்துக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் இவர் முதல்வராக எதிர்பாராதவிதமாக ஆனார்" என்றார்.