திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்தக் கனமழை காரணமாக ஆலங்காயம் நாகம்மாள் கோவில் அருகே உள்ள வனத்துறை குடியிருப்பு பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேருடன் சாய்ந்தது. மேலும் பல்வேறு இடங்களுக்கு மின்சாரம் சப்ளை செய்யும் டிரான்ஸ்பார்மர் மற்றும் 7 மின்கம்பங்கள் சாய்ந்தது.
இதில் மூன்று மின்கம்பங்கள் உடைந்து விழுந்தது. இதன் காரணமாக வைசியர் வீதி, பால விநாயகர் ஷெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக மின்சார துறைக்கும் வருவாய்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து மின்சாரதுறையினர் உடைந்து விழுந்த மற்றும் சாய்ந்து விழுந்த மின் கம்பங்களையும், டிரான்ஸ்பார்மர் ஆகியவற்றை அப்புறப்படுத்தி மின்கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உடைந்து விழுந்த புளிய மரத்தை வெட்டி எடுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நள்ளிரவு முதல் ஆலங்காயம் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.