சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை பகுதிகளில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம், புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி, புவனகிரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சித்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு புவனகிரி தனியார் திருமண மண்டபத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர்.
இதனை தொடர்ந்து பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பூவாலை கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து அவர்கள் சிதம்பரம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரிசி, பாய், போர்வை, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எம்.சி. சம்பத், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன், மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமாறன், அதிமுக அமைப்பு செயலாளர் முருகுமாறன், தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.