அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ்சின் மூத்த மகன் ரவீந்திரநாத் தேனி மாவட்ட ஜெ. பேரவை செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில்தான் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதிக்கு போட்டியிடுவதாக விருப்ப மனு கொடுத்தார். அதைத்தொடர்ந்து இபிஎஸ், ஓபிஎஸ் நடத்திய நேர்காணலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கலந்துகொண்டார். அதுபோல் தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடிய பொறுப்பிலுள்ள ர.ர.க்கள் விருப்பமனு கட்டி நேர்காணலுக்கும் சென்று திரும்பி இருக்கிறார். ஆனால் இன்னும் தலைமை கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளையும் பிரிக்கவில்லை. வேட்பாளர்களையும் அறிவிக்க வில்லை.
அப்படி இருக்கும்போது ஓபிஎஸ், என் மகன் ரவீந்திரநாத் தனது ஆதரவாளரான தேனி மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவில் உள்ள பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர்கள் மூலமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத் திட்டங்கள் வழங்கியதுபோல் படங்களை போட்டு அதில், வாக்களிப்பீர் இரட்டை இலை என எழுதி இரட்டை இலை சின்னத்தையும் போட்டு அதன் அருகே ஓபிஎஸ் மகன் ஓட்டு கேட்டு கையெடுத்து கும்பிட அதுபோல் படங்களையும் போட்டு போட்டோ டிசைன் செய்து மாவட்டத்திலுள்ள கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கட்சியின் அனுதாபிகள், பொது மக்கள் ஆகியோர்களின் செல்களுக்கு வாட்ஸ்அப் மூலமாகவும் பேஸ்புக் மூலமாகவும் ஓபிஎஸ் மகன் ஓட்டு கேட்பது போல் அனுப்பி வைத்து இருக்கிறார்கள்.
ஆனால் கட்சியின் தலைமையில் ஓபிஎஸ் மகனுக்கு என சீட்டு இன்னும் ஒதுக்கவே இல்லை. அப்படி இருக்கும்போது தனது அதிகாரத்தை வைத்து இப்பவே சீட் கிடைத்தது போல் விளம்பரம் செய்து கொண்டு தேர்தல் களத்தில் பவனி வருகிறார். இதைக்கண்டு ஆளுங்கட்சியில் உள்ளவர்களை ஓபிஎஸ் மகனின் நடவடிக்கையை கண்டு மனம் நொந்து போய் வருகிறார்கள். அதோடு மாவட்டத்தில் உள்ள அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.